சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் மெதுவடைந்துள்ளன.
எரிசக்தி விலை உயர்வு, ஈரான் போரால் விநியோக நடவடிக்கைகளில் இடையூறுகள், அமெரிக்கா விதிக்கக்கூடிய கூடுதலான வரி ஆகியவற்றால் வர்த்தகச் சூழல் தெளிவற்ற நிலையில் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின்னணுச் சாதனங்களின் ஏற்றுமதி தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டது. இருப்பினும், மின்னணு சாரா பொருள்களுக்கான ஏற்றுமதி குறைந்தது.
எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 4 விழுக்காடு அதிகரித்துள்ளது. அது தொடர்ந்து ஆறாவது மாதமாக அதிகரித்துவருவதாய் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.
புளூம்பெர்க் ஆய்வு ஒன்றில் நிபுணர்கள் முன்னுரைத்திருந்த 5.3 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அது குறைவு.
எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஒட்டுமொத்தமாகக் கடந்த ஜனவரியிலும் பிப்ரவரியிலும் 6.7 விழுக்காடு வளர்ச்சிகண்டது.
பிப்ரவரியில் மட்டுமே, மின்னணுச் சாதனங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட 43.2 விழுக்காடு கூடியது. ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் அல்லது பகுதிமின்கடத்திகளின் ஏற்றுமதி 51.2 விழுக்காடாகவும் கணினி ஏற்றுமதி 22.9 விழுக்காடாவும் உயர்ந்தன.
இதற்கிடையே, மின்னணு சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 6.9 விழுக்காடு குறைந்தது. கடந்த ஜனவரியில் அது 3.1 விழுக்காடு சரிந்திருந்தது. உணவுத் தயாரிப்பு, பெட்ரோலிய ரசாயனம், தங்கக் கட்டிகள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதிகள் சுருங்கின.
தொடர்புடைய செய்திகள்
சந்தைகளைப் பொறுத்தவரை, தென்கொரியா, தைவான், ஹாங்காங் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்தது. அமெரிக்காவுக்கும் இந்தோனீசியாவுக்குமான ஏற்றுமதி இறங்கியது.
அமெரிக்காவுக்கான மின்னணு சாரா ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட 59.2 விழுக்காடு சரிந்தது. இருப்பினும், அந்நாட்டுக்கான மின்னணு ஏற்றுமதி கிட்டத்தட்ட 95 விழுக்காடு அதிகரித்தது.

