கூ டெக் புவாட் மருத்துவமனை தலைமைத்துவம் மாற்றம்

கூ டெக் புவாட் மருத்துவமனை தலைமைத்துவம் மாற்றம்

படங்கள்: என்எச்ஜி ஹெல்த்

02 Nov 2026 - 8:19 pm

1 mins read

கூ டெக் புவாட் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனை ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக வோங் கிர்க் சுவான் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

இதன்மூலம் அவர் சுவா ஹொங் சூன் தற்போது வகிக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள திரு சுவா, இப்பொறுப்பிலிருந்து விலகிய பிறகும் என்எச்ஜி கல்லூரியின் தலைவராகத் தொடர்ந்து செயல்படுவார்.

அத்துடன், மனநலக் கழகத்தில் மூத்த மனநல மருத்துவ ஆலோசகராகத் தமது மருத்துவப் பணியையும் அவர் முன்னெடுப்பார் என்று என்எச்ஜி ஹெல்த் திங்கட்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

என்எச்ஜி ஹெல்த் குழுமத்தில் கூ டெக் புவாட் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனை, டான் டாக் செங் மருத்துவமனை, உட்லண்ட்ஸ் மருத்துவமனை, என்எச்ஜி பலதுறை மருந்தகங்கள், மனநலக் கழகம், தேசிய தோல் மையம், தொற்றுநோய்களுக்கான தேசிய மையம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கூ டெக் புவாட், ஈசூன் சமூக மருத்துவமனைகளின் தலைமை இயக்க அதிகாரியாகத் திரு வோங் பணியாற்றினார்.

அவர் சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றியுள்ளதை என்எச்ஜி ஹெல்த் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, சமூக சுகாதார உதவித் திட்டத்தை (சாஸ் அட்டை) நாடு தழுவிய அளவில் செயல்படுத்துவதில் திரு வோங் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
தலைமை நிர்வாக அதிகாரிபதவிமருத்துவம்