தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்ப்ப காலத்திலேயே ‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்தில் குறைந்த வருமானக் குடும்பக் குழந்தைகளைச் சேர்க்க முயற்சி

2 mins read
76be0f56-8983-4cbb-bd68-f7dd797dbbe9
திருவாட்டி பெரென்சியா மோனியாகா தனது இளைய மகள் ஹவாவுடன். தனது ஐந்து குழந்தைகளில் ஹவா மட்டுமே கிட்ஸ்டார்ட் திட்டத்திற்கு தகுதி பெற்றதாகவும் மற்றவர்கள் திட்டம் தொடங்குவதற்கு முன்பே பிறந்து விட்டனர் என்றும் திருவாட்டி பெரென்சியா கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வசதி குறைந்த பிள்ளைகளின் மேம்பாட்டுக்கான ‘கிட்ஸ்டார்ட்’ செயல்திட்டம், கருவுற்ற தாய்மாரை அதிக அளவில் சேர்க்க இலக்கு கொண்டுள்ளது.

அதிகமானோர் பயன்பெறும் வகையில் கூடுதலான தாய்மாரைக் கர்ப்ப காலத்திலேயே இத்திட்டத்தில் சேர்வதை ஊக்குவிப்பதாக அதன் தலைமை நிர்வாகி ரஹாயு புவாங் கூறினார்.

இதுவரை ‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்தில் பயன்பெற்றுள்ள பெரும்பாலான குழந்தைகள், அவர்கள் பிறந்த பிறகுதான் இதில் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், கே கே மகளிர் சிறார் மருத்துவமனையும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையும் அணுகிய கர்ப்பிணிகளைக்கொண்ட 750 குடும்பங்களில் 60 விழுக்காட்டினர் மட்டுமே ‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்தில் சேர்ந்துள்ளதாக திருவாட்டி ரஹாயு குறிப்பிட்டார்.

“ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 3,000 குழந்தைகள் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்திற்குத் தகுதி பெறுவர். குழந்தையின் முதல் ஐந்து ஆண்டுகள் அதனுடைய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்பதை அறிந்து நாங்கள் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தகுதியுள்ள குடும்பங்களை அணுகி அவர்களைப் பதிவு செய்ய ஊக்குவிக்கவும் விரும்புகிறோம்,” என அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் மகப்பேறு, மகளிர் மருத்துவப் பிரிவில் காத்திருப்பு அறைகளில் இருக்கும் தாய்மார்களை அணுகி இத்திட்டம் குறித்து விளக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 6,200க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதன்மூலம் பயன் அடைந்துள்ளனர்.

ஆறு வயது வரையிலான குறைந்த வருமானக் குடும்பப் பிள்ளைகளுக்குப் பலதரப்பட்ட ஆதரவை அந்தத் திட்டம் வழங்குகிறது.

பிள்ளையின் வளர்ச்சியைக் கண்காணித்தல், சத்துணவு, பிள்ளை வளர்ப்புக்கான உத்திகள் போன்ற அம்சங்கள் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்