தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூரோங் வெஸ்ட் தரைவீடு குடியிருப்பிலிருந்து அகற்றப்பட்ட ராஜநாகம்

2 mins read
537bf308-cc71-45ff-9fb7-8dbdd77bcd3d
வெஸ்ட்வூட் கிரசெண்ட் வட்டாரத்தில் உள்ள சாக்கடை ஒன்றில் இருந்த ராஜநாகத்தைப் பத்திரமாக அகற்றிய தேசிய பூங்காக் கழக அதிகாரிகள். - படம்: நிக்கோல் லிம்

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள தரைவீடு குடியிருப்புப் பகுதியிலிருந்து ராஜநாகம் ஒன்று அகற்றப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) வெஸ்ட்வூட் கிரசெண்ட்டில் உள்ள தமது அண்டைவீட்டுக்காரரிடமிருந்து அதிர்ச்சி தரும் குறுஞ்செய்தி ஒன்று திருவாட்டி நிக்கோல் லிம்முக்குக் கிடைத்தது.

தமது வீட்டுக்கு வெளியே பெரிய பாம்பு ஒன்றைக் கண்டதாக குறுஞ்செய்தியில் அந்த அண்டைவீட்டுக்காரர் குறிப்பிட்டிருந்தார்.

சாக்கடையிலிருந்து ஒரு பாம்பின் தலை தென்படும் படம் ஒன்று குறுஞ்செய்தியுடன் அனுப்பப்பட்டிருந்தது.

திருவாட்டி லிம் உடனடியாக தேசிய பூங்காக் கழகத்துடன் தொடர்புகொண்டு அதைப் பற்றி தெரிவித்தார்.

அந்தச் சாக்கடை வழியாக அந்தப் பாம்பு மீண்டும் வந்தால் மீண்டும் புகார் அளிக்குமாறு திருவாட்டி லிம்மிடம் கழகம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதே நாளன்று அந்தப் பாம்பை அந்த அண்டைவீட்டுக்காரர் பார்த்தார்.

இம்முறை திருவாட்டி லிம்மின் மாமனார் கழகத்திடம் புகார் அளித்தார்.

கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவ்விடத்தை அடைந்ததாக திருவாட்டி லிம் கூறினார்.

ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளமுள்ள சுண்டா வகை ராஜநாகம், வெஸ்ட்வூட் கிரசெண்ட் குடியிருப்புப் பகுதியிலிருந்து பத்திரமாக அகற்றப்பட்டதாக தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு மேலாண்மைக் குழு இயக்குநர் ஹாவ் சூன் பெங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தெரிவித்தார்.

விலங்கு மருத்துவப் பரிசோதனைக்காக அந்த ராஜநாகம் கழகத்தின் வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதை விடுவிக்கலாம் என்று சோதனையின் மூலம் தெரிய வந்தால் மனிதர்கள் இல்லாத வனப்பகுதிக்குள் அது விடுவிக்கப்படும் என்று கழகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்