2024ஆம் ஆண்டு நடந்த கிச்சனர் ரோடு கொலைக்குக் காரணமான கைகலப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயது சதிஷ் ஜேசன் பிரபாசுக்கு ஓராண்டு, 10 மாதச் சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படிகளும் புதன்கிழமை (அக்டோபர் 28) விதிக்கப்பட்டன.
அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நவீன்ஜெய் சி நாதனுக்குக்் கடுமையான காயம் விளைவித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கு 700 வெள்ளிக்குமேல் இழப்பீடு வழங்கவும் சதீஷுக்கு உத்தரவிடப்பட்டது.
கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த தினேஷ் வாசீ என்பவரைச் சதீஷ் தாக்கவில்லை.
அந்த மோதலில் தினேஷைத் தாக்கிய 22 வயது பிரதேவ் சசி குமாருக்கு முன்னர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தினேஷைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 வயது முகம்மது சஜித் சலீமின் வழக்கு நிலுவையில் உள்ளது.
சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த சதீஷ், கூட்டாளிகளுடன் அங்கு வந்து கைகலப்பில் ஈடுபட்டார்.
அப்போது சஜித் கத்தியால் நவீன்ஜெய், தினேஷ் உட்பட மூவரை வெட்டினார். பாதிக்கப்பட்ட நவீன்ஜெய் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தாக்குதலின்போது சதீஷ் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
