எட்டு மாதக் குழந்தையான மிஷெல் இங், தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் கழித்துள்ளார்.
அவர் ‘அனோமலஸ் லெஃப்ட் கொரனரி ஆர்ட்டரி ஃப்ரம் தி பல்மனரி ஆர்ட்டரி’ (அல்கேப்பா) எனப்படும் ஓர் அரிய வகை இதயக் குறைபாட்டுடன் பிறந்தார். இக்குறைபாட்டிற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால், அது பச்சிளம் குழந்தைகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கிடையே, ‘தலாசீமியா’ (thalassaemia) என்ற ரத்தக் குறைபாட்டிற்காக 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 12 வயது சிறுமி மிஷெல் போ, தீவிர சுவாசக் கோளாறு காரணமாக 2026 ஜனவரியில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இளம் நோயாளிகளை விரைவாக மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பச் செய்யும் ஒரு திட்டத்தின்கீழ், அவ்விரு சிறுமிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் 72 மணி நேரத்திற்குள் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.
மருத்துவத் துறை கண்டுள்ள மேம்பாடுகளால் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், தீவிர சிகிச்சையால் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகளிலிருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள சிறார்களும் அவர்களது குடும்பத்தினரும் மீண்டுவர உதவுவதை இந்தப் பலதுறை மீட்புத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போது, செயற்கை சுவாசக் கருவியின் உதவியில் இருந்த நோயாளிகளில் 44 விழுக்காட்டினர் ஆரம்பகட்ட உடலியக்கப் பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 2024ஆம் ஆண்டில் அந்த விகிதம் 60 விழுக்காடாக அதிகரித்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மிஷெல் இங் கடுமையான இதயக் கோளாறு காரணமாக இன்னமும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். ஆனால், மிஷெல் போ வெறும் இரண்டு மாதங்களிலேயே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார்.
நோயாளியை விழிப்புடன் இருக்கச் செய்வதும், தானாகவே சுவாசிக்க வைப்பதும், அவரை இயன்றவரை சௌகரியமாக வைத்துக்கொள்வதும் ‘லெட்ஸ் மூவ்எம்’ (Let’s MoveEM) எனும் அந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நோய்வாய்ப்பட்ட குழந்தையை உடற்பயிற்சி செய்ய வைப்பது, தாதியரும் இயன்முறை மருத்துவர்களும் ஒருங்கிணைந்து ஈடுபடும் ஒரு கூட்டு முயற்சி என மருத்துவமனை தெரிவித்தது.
