சாலைகளில் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அதன்படி குழந்தைகளை எதிர்பார்க்கும் பெற்றோர்களுக்கு அம்மருத்துவமனை கார் பாதுகாப்பு இருக்கையைக் கடனாக வழங்கவுள்ளது.
பச்சிளங்குழந்தைகளுக்கான கார் பாதுகாப்பு இருக்கை திட்டத்தின் முதல் ஆண்டில் ஏறக்குறைய 300 குழந்தைகள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) வெளியிட்ட அறிக்கையில் மருத்துவமனை தெரிவித்தது.
ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் காயமடையும் ஏறக்குறைய 400 குழந்தைகளுக்கு கேகே மகளிர், சிறார் மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகிறது. காரில் குழந்தைகள் பாதுகாப்பான இருக்கையில் இல்லாதபோது தலை, முதுகுத் தண்டு, உள்உறுப்புகளில் மோசமான காயம் ஏற்படுகிறது.
ஆனால் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் குழந்தைகளுக்கு காயம் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
“உயிரைப் பாதுகாப்பதற்கு கார் இருக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன என்ற விழிப்புணர்வு பெற்றோர்களிடையே தேவை,” என்று அவசர மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் ரோனால்ட் டான் குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில் 1,483 பச்சிளங்குழந்தைகளும் இளம் பருவத்தினரும் சிக்கிய சாலை விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்ட சம்பவங்களில் அவர்கள் பாதுகாப்பு இருக்கையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
2020ல் வெளியிடப்பட்ட மற்றோர் ஆய்வில், பெற்றோர் பலரும் பராமரிப்பாளர்களும் கார் பாதுகாப்பு இருக்கைகளை எப்படிப் பொருத்துவது அல்லது பயன்படுத்துவது என்பது தெரியாமல் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் பயன்பாடு குறித்தும் அவர்களுக்கு சந்தேகம் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
கூடுதலாக, செலவும் அசௌகரியமும் மற்றொரு காரணம் என்று ஆய்வு தெரிவித்தது.
சிங்கப்பூரின் சட்டப்படி 1.35 மீட்டருக்கும் குறைவாக உள்ள அனைவரும் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்யும்போது பாதுகாப்பான இருக்கைகளில் வைக்கப்பட வேண்டும்.
இதற்கிடையே குழந்தை பெற்றுக்கொள்ளவிருக்கும் தாய்மார்கள், ஆரம்பகட்டப் பரிசோதனையின்போது (for.sg/buckleupbaby) கார் பாதுகாப்பு இருக்கைகளுக்குப் பதிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.