கத்தியால் தாக்கப்பட்ட மாதிற்குக் கட்டாய சிகிச்சை உத்தரவு

கத்தியால் தாக்கப்பட்ட மாதிற்குக் கட்டாய சிகிச்சை உத்தரவு

2 mins read
8b4f5938-ad5b-4c89-80c7-add18b7adf8c
அப்பர் சிராங்கூன் பேரங்காடியில் நடந்த தாக்குதலின் தொடர்பில், சொங் யெட் யிங் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. - படம்: சின்மின்

அப்பர் சிராங்கூன் பேரங்காடியில் நடந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட மாதிற்குக் கட்டாய சிகிச்சை உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டும் என்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

சொங் யெட் யிங், 44, மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வேண்டுமென்றே காயம் விளைவித்தது, மிரட்டியது, கவனக்குறைவினால் காயம் விளைவித்தது ஆகியவையே அவை.

சென்ற ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி, மலேசியாவைச் சேர்ந்த அந்த மாது, அவரது உறவினரைத் தேட, அந்தப் பேரங்காடியில் உள்ள புத்தகக் கடை ஒன்றுக்குச் சென்றிருந்தார்.

சொங்கிடம் கத்தி ஒன்று இருந்தது.

அங்குச் சென்றடைந்ததும், கெரொலின் என்ற பெண்ணிடம் அவரது உறவினர் இருக்கும் இடத்தைப் பற்றிக் கேட்டார். அதற்குத் தெரியாது என்று பதிலளித்த கெரொலின், சொங்கின் உறவினரைத் தேடச் சென்றார்.

ஆனால், கோபமடைந்த சொங், கத்தியால் கெரொலினைத் தாக்கினார். அவ்வாறு செய்தபோது, சொங் கீழே விழுந்து, லு என்ற மற்றொரு பெண்ணின் கையில் கீறினார்.

நீதிமன்ற ஆவணங்களில் அடையாளம் காணப்பட்ட மற்ற இருவரான வோங்கும் சானும், கெரொலினைக் கத்தியால் காயப்படுத்துவதிலிருந்து சொங்கைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.

சொங்கின் கையைப் பிடித்த வோங்கிற்குக் கையிலும் சானுக்குக் காலிலும் கீறல்கள் ஏற்பட்டன.

சொங்கிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக மனநலக் கழகத்தின் மருத்துவ அறிக்கை ஒன்று காட்டியது.

சொங், மனநலக் கழகத்தில் இரண்டு வாரங்களுக்குத் தடுத்துவைக்கப்படவேண்டும் என்று நீதிபதி கேட்டுக்கொண்டார். கட்டாய சிகிச்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள், தங்கள் மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெறுவார்கள்.

சொங்கிற்கு மார்ச் 16ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்