ஈசூனில் கத்தித் தாக்குதல்: ஆடவர் கைது

ஈசூனில் கத்தித் தாக்குதல்: ஆடவர் கைது

படம்: கூகல் மேப்ஸ்

14 Nov 2026 - 6:33 pm

1 mins read

ஈசூனில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நடந்த கத்தித் தாக்குதலைத் தொடர்ந்து, அபாயகரமான ஆயுதத்தால் தன்னிச்சையாகக் காயம் விளைவித்ததற்காகவும் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் 67 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈசூன் அவென்யூ 6ல் உள்ள புளோக் 461Bல் நடந்த அந்தச் சம்பவம் குறித்துத் தங்களுக்கு நவம்பர் 13ஆம் தேதி பிற்பகல் 4.05 மணி அளவில் தகவல் கிடைத்ததாக ஊடகங்களுக்கு அளித்த பதிலில் காவல்துறை தெரிவித்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, காயமடைந்த நிலையில் ஆடவர் ஒருவர் இருப்பதைக் கண்டனர்.

சுயநினைவுடன் இருந்த 58 வயதான அந்த ஆடவர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அந்தச் சம்பவத்திற்கு முன்னதாக ஆடவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறையினர் கூறினர். கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
கத்திதாக்குதல்கைது