வேனில் கத்தி, மின்சிகரெட்: ஆடவர் கைது

1 mins read
போதைப்பொருள் புழக்கத்துக்கான துணைக்கருவிகளும் பிடிபட்டன
abf9f95c-9040-4f7b-9963-5ee84a07e57a
பாய லேபாரில் உள்ள தஞ்சோங் கத்தோங் காம்ப்ளெக்சுக்கு அருகே நேர்ந்த விபத்தை அடுத்து ஆடவரின் வேனில் கத்தி, இரண்டு மின்சிகரெட்டுகள், போதைப்பொருள் புழக்கத்துக்கான துணைக்கருவிகள் ஆகியவை பிடிபட்டன. - படம்: எஸ்ஜி ரோடு விஜிலாண்ட்/ஃபேஸ்புக்

பாய லேபாரில் உள்ள தஞ்சோங் கத்தோங் காம்ப்ளெக்சுக்கு அருகே திங்கட்கிழமை (டிசம்பர் 2) நேர்ந்த விபத்தை அடுத்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வேனில் கத்தி, இரண்டு மின்சிகரெட்டுகள், போதைப்பொருள் புழக்கத்துக்கான துணைக்கருவிகள் ஆகியவை காணப்பட்டதால் காவல்துறை அவரைக் கைது செய்தது.

சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் சிம்ஸ் அவென்யூவில் ஒரு காரும் இரண்டு வேன்களும் மோதிக்கொண்ட சம்பவம் குறித்துப் பிற்பகல் 3.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

விபத்தில் தொடர்புடைய வேன்களில் ஒன்றின் ஓட்டுநரான 42 வயது ஆடவரை, ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டது ஆகியவை குறித்த சந்தேகத்தின்பேரில் கைது செய்ததாக அது குறிப்பிட்டது.

போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதன் தொடர்பிலும் அவர் விசாரிக்கப்படுகிறார்.

காரை ஓட்டிய 44 வயது ஆடவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

விபத்துக்குப் பிந்தைய சூழலைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அதில், விஸ்மா கேலாங் சிராய்க்கு அருகே உள்ள ஐந்து தடங்களைக் கொண்ட சாலையின் வலத்தடத்தில், கதவு திறந்த நிலையில் ஒரு வேன் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அதற்கடுத்த தடத்தில் காவல்துறை கார் நிறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை காருக்குச் சில மீட்டர் முன்பாக, கார் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்பகுதி மோசமாகச் சேதமடைந்துள்ளது. காருக்குமுன் பழுதான வாகனங்களை இழுத்துச்செல்லும் வாகனங்கள் இரண்டும் மேலும் ஒரு வேனும் காணப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்