கோலாலம்பூர் விமான நிலையம்: சிங்கப்பூரர் தவறவிட்ட கைப்பையைக் கண்டுபிடித்த காவல்துறையினர்

2 mins read
b0764561-4034-40c2-bdf6-231fbb326ccb
சிங்கப்பூர் வந்தடையும் வரை தனது கைப்பை காணவில்லை என்பதைத் திருவாட்டி வாங் அறியவில்லை. - படங்கள்: சின் சியூ நாளேடு/மதர்ஷிப் இணையத்தளம்

சிங்கப்பூர் மாது ஒருவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தவறவிட்ட கைப்பையை ஐந்து மணி நேரத் தேடலுக்குப்பின் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வாங் ஹுய்லிங் எனும் அந்தப் பெண், கடந்த டிசம்பர் 20ஆம் தேதி ஜப்பானிலிருந்து கோலாலம்பூர் வழியாக விமானத்தில் சிங்கப்பூர் வந்துசேர்ந்தார்.

அலுவல் தொடர்பாகப் பயணம் செய்த அவர் நேரடி விமானத்தில் இடம் கிடைக்காததால் கோலாலம்பூர் வழியாக வர நேரிட்டதாகக் கூறினார்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவரை ஏற்றிச்செல்ல வந்த வாகன ஓட்டுநர் விரைந்து வரும்படி கூறிக்கொண்டேயிருந்ததால் தான் பதற்றமடைந்ததாக திருவாட்டி வாங் கூறினார்.

சிங்கப்பூர் வந்துசேரும்வரை கைப்பையைத் தவறவிட்டதை அவர் அறிந்திருக்கவில்லை.

அந்தக் கைப்பையில் அவரது ஆய்வு முடிவுகள் அடங்கிய தரவுச் சேமிப்புக் கருவி (USB flash drive) இருந்ததால் மறுநாளே தனது கைப்பையைத் தேடி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துச் சென்றார் திருவாட்டி வாங்.

தொலைந்துபோய்க் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களுக்கான முகப்பை அணுகிய அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கிருந்த ஆவணங்களில் அத்தகைய கைப்பை குறித்து எந்தத் தகவலும் பதிவாகியிருக்கவில்லை.

விமான நிறுவன ஊழியர்களின் ஆலோசனைப்படி, விமான நிலையக் காவல்துறையினரிடம் அவர் புகாரளித்தார்.

தனது புகாரைத் தீவிரமாகக் கருதி, கண்காணிப்பு கேமராப் பதிவுகளை அதிகாரிகள் மறுஆய்வு செய்ததாகவும் அத்துடன் நேரடியாகவும் விமான நிலையத்தில் அவர்கள் தேடியதாகவும் திருவாட்டி வாங் கூறினார்.

ஐந்து மணி நேரத் தேடலுக்குப்பின் அவரது கைப்பையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய ஊழியர்களின் முயற்சி தன் மனத்தை நெகிழச்செய்வதாகக் கூறிய அவர் நொராஸ்ரின், ஸ்ரீதரன், நன்ஜிஹான், அமிருடி ஆகிய ஊழியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்