எதிர்வரும் புனித யாத்திரை காலத்தில் கூசு தீவுக்குச் செல்ல விரும்புவோர் வார நாள்களில் அங்கு செல்லுமாறு சிங்கப்பூர் நில ஆணையம் ஆலோசனை கூறியுள்ளது.
ஆக்டோபர் 3 முதல் 31ஆம் தேதி வரை வாரயிறுதிகளில் அங்கு பெருந்திரளாக வருகையாளர்கள் கூடுவர் என்பதே அதற்குக் காரணம் என்று ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்தீவில் 1923ல் கட்டப்பட்ட உள்ள துவா பே கோங் சீனக் கோயிலில் நடைபெறும் வருடாந்தர யாத்திரைக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்கிறார்கள். அத்தீவில் மூன்று மலாய் வழிபாட்டுத் தலங்களும் உள்ளன.
கூசு தீவுக்குச் செல்ல விரும்புவோர் www.islandcruise.com.sg என்ற இணையத் தளத்தில் படகு நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம் அல்லது படகு புறப்படும் மரினா சவுத் பியரில் உள்ள சிங்கப்பூர் ஐலண்ட் குரூஸ் & ஃபெர்ரி சர்வீசஸ் முகப்பில் வாங்கலாம்.
அந்நிறுவனம்தான் படகு சேவைகளை நடத்த அங்கீகாரம் பெற்ற நடத்துநர். அதன் படகு நுழைவுச்சீட்டுகளை வாங்கியோர், அதற்குரிய உறுதிப்படுத்தும் மின்னஞ்சல்களை, படகு முனையத்தில் உள்ள நடத்துநரின் கூடத்தில் காண்பித்து, தங்கள் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
புனித யாத்திரை காலத்தில் கூசு தீவு, மரினா சவுத் பியர் இரண்டிலிருந்தும் நாள்தோறும் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை படகுகள் புறப்படும். மரினா சவுத் பியர் படகு முனையத்திலிருந்து முதல் படகும் கடைசி படகும் முறையே காலை 7 மணிக்கும் மாலை 5 மணிக்கும் புறப்படும். கூசு தீவிலிருந்து கடைசி படகு இரவு 7 மணிக்குப் புறப்படும்.
கூசு தீவில் இரவைக் கழிக்க வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை. அங்கு தங்கள் செல்லப் பிராணிகளையும் கொண்டு செல்லக்கூடாது என்று சிங்கப்பூர் நில ஆணையம் நினைவூட்டுகிறது.

