தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூடுதல் தாதியர்: தக்கவைத்துக்கொள்வதில் கவனம்

2 mins read
6e706c20-af93-44f2-bf75-63102ad383d9
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மை ஆண்டுகளில் சிங்கப்பூர் மோசமான தாதியர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியது.

அப்பிரச்சினையைக் கையாள கூடுதல் தாதியர் வேலைக்கு எடுக்கப்பட்டனர். புதிய தாதியரை வேலைக்கு எடுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டதோடு ஏற்கெனவே பணியில் இருப்போரைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்திகளில் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூர், வெளிநாட்டுத் தாதியர் என இரு தரப்பினருக்கும் இது பொருந்தும்.

கடந்த ஆண்டில் கூடுதலான தாதியரை வேலைக்கு எடுக்கப் பல அனுகூலங்களையும் திட்டங்களையும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்தார். அதோடு, பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியன்று தாதியருக்கான ‘ஏஞ்சல்’ எனும் விருதை திரு ஓங் அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின்கீழ் 20 ஆண்டுகளில் ஒருவர் 100,000 வெள்ளி வரை போனஸ் பெறலாம். கிட்டத்தட்ட 29,000 தாதியர் பலனடைவர்.

2022ஆம் ஆண்டிறுதியில் மொத்தமாக 23,720 தாதியர் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் பணியாற்றினர். சென்ற ஆண்டு கூடுதலாக 5,600 தாதியர் சேர்க்கப்பட்டனர்.

புதிய தாதியரை எப்படி சீரான முறையில் துரிதமாகப் பணியில் ஈடுபடுத்துவது என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வரும் தாதியருக்கு இது பொருந்தும்.

வெளிநாடுகளிலிருந்து வரும் தாதியர் விரைவில் தங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்திக்கொள்வர் என்று எதிர்பார்க்க முடியாது.

சிங்கப்பூரில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் இதுபோன்ற அம்சங்களைக் கருத்தில்கொண்டே இயங்குகின்றன. புதிய தாதி ஒவ்வொருவரையும் சீரான முறையில் பணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (ஒன்போர்டிங் புரோசஸ்) மூன்று மாதங்கள் நீடிக்கிறது.

ஏற்கெனவே பணியில் இருக்கும் தாதியரைத் தக்கவைத்துக்கொள்ள நிதி சார்ந்த அனுகூலங்களை வழங்குவது முக்கியம் என்றாலும் அதை மட்டும் நம்பியிருக்க முடியாது. தங்களின் பணியில் அர்த்தம் இருப்பதாக நம்பும் தாதியரே ஆக்கபூர்வமாகச் செயல்படுவதாகவும் அவர்கள் வேலையிலிருந்து விலகும் வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாதியர் தொடர்ந்து தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்வது, துறையில் தனிச்சிறப்பு பெறுவது போன்றவற்றுக்கு சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அந்த வகையில் உயர்தர பயிற்சிகொண்ட தாதியரின் (ஏபிஎன்) அறிமுகம் உதவக்கூடும்.

ஏபிஎன் தாதியர், தாதியர் கல்வியில் குறைந்தது முதுநிலைப் பட்டம் பெற்றவர்களாக இருப்பர். அவர்கள் அதிகாரபூர்வமாக நோயாளிகளின் உடல்நலனைக் கணித்து மருந்து பரிந்துரைக்க முடியும்.

புதிய தாதியரை வேலைக்கு எடுத்து அவர்களைச் சீராகப் பணியில் சேர்த்துத் தக்கவைத்துக்கொள்வது சாதாரணமன்று. குறிப்பாக 60 விழுக்காட்டுத் தாதியர் வெளிநாட்டவராக இருக்கும்போது இது சவாலாக அமைகிறது.

அதைக் கையாள கூடுதல் சிங்கப்பூரர்கள் தாதியராகப் பணியாற்ற முன்வருவர் என்று நம்பிக்கை கொள்ளலாம். தாதியரை வேலைக்கு எடுத்துத் தக்கவைத்துக்கொள்வதோடு நோயாளிப் பராமரிப்பு மேம்படுவதையும் உறுதிசெய்வது அவசியம்.

தாதியரை வேலைக்கு எடுப்பது, சீராக பணியில் ஈடுபடுத்துவது, அவர்களை வேலையில் தக்கவைத்துக்கொள்வது ஆகியவை சிங்கப்பூருக்கு இன்றியமையா வகையில் கைகொடுக்கும். நாம் அனைவரும் பங்காற்றுவோம்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

குறிப்புச் சொற்கள்