சிங்கப்பூர்ப் பொருளியலுக்கு $150 மில்லியன் ஈட்டிய லேடி காகா நிகழ்ச்சி

2 mins read
4c6468c1-687d-4038-a3db-b375e30b28cb
சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற லேடி காகா (படத்தில்) கலை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் விற்று முடிந்தன. - படம்: ஹூங் சி ஹாவ் / @ஹெச்வென்சர்ஸ்

அனைத்துலக அளவில் பிரபல கலைஞரான லேடி காகா (Lady Gaga) மே மாதம் சிங்கப்பூரில் நடத்திய பிரத்தியேக கலை நிகழ்ச்சிகள் சிங்கப்பூரின் பயணத் துறைக்கு $100லிருந்து $150 மில்லியனை ஈட்டுத் தந்துள்ளதாக நிபுணர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift), கோல்ட்பிளே (Coldplay) கலை நிகழ்ச்சிகள் $350லிருந்து $500 மில்லியன் வரை ஈட்டின. லேடி காகாவின் நிகழ்ச்சி அதைவிட குறைந்த வருவாயை ஈட்டித்தந்தாலும் ஆசியாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்த சிங்கப்பூர் தொடர்ந்து பிரபல தளமாக இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

பில்போர்ட் (Billboard) எனும் அமெரிக்க இசை, பொழுதுப்போக்கு வெளியீடு சிங்கப்பூரில் நடைபெற்ற லேடி காகா கலை நிகழ்ச்சிக்கு விற்பனையான 193,000 நுழைவுச்சீட்டுகள் மூலம் ஏறக்குறைய $40.8 மில்லியன் டாலர் பெறப்பட்டதாகக் கூறியது.

பில்போர்ட் வெளியீட்டின் மாதாந்தர அறிக்கை, சிங்கப்பூரின் தேசிய விளையாட்டு அரங்கில் மே 18, 19, 21, 24 ஆகிய நாள்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு நாள் இரவும் ஏறக்குறைய $13 மில்லியன் தொகை ஈட்டப்பட்டது. சிங்கப்பூர்த் தேசிய விளையாட்டு அரங்கில் ஏறக்குறைய 50,000 பேர் வரை அமர முடியும்.

மே மாதம் இடம்பெற்ற ஒரே ஒரு லேடி காகா நிகழ்ச்சி அது. மே 3ஆம் தேதி பிரேசிலின் கோபாசபானா கடற்கரையில் லேடி காகா ஏற்பாடு செய்த இலவச கலை நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பேர் திரண்டனர்.

கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட வருவாய் வழக்கமாக நுழைவுச்சீட்டு விற்பனையிலிருந்து வரும். சுற்றுலா வருவாய், உணவு, பானம், தங்குமிடம், பொருள்கள் வாங்குவது போன்றவற்றில் வெளிநாட்டினர் செலவு செய்யும் பணத்தைக் குறிக்கிறது.

கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற காலக்கட்டத்தில் சிங்கப்பூருக்குப் படையெடுத்த அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இவ்வாண்டு மே மாத வருகையாளர்களின் எண்ணிக்கை 8 விழுக்காடு அதிகரித்ததாக சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்