விளக்கு வேறுபடினும் ஒளி ஒன்றே!

விளக்கு வேறுபடினும் ஒளி ஒன்றே!

நிலவு தன் முகத்தை மூடிக்கொண்டு, விளக்குகளின் வெளிச்சத்துக்கு வழிவிடும் தீபத் திருநாள் இன்று!
1 of 3
படம்: த. கவி
படம்: பிபிசி
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

08 Nov 2026 - 8:36 pm

4 mins read

வெவ்வேறு நாடுகள், பல்வேறு மொழிகள், பல புராணக் கதைகள் எல்லாம் ஒன்றுகூடி, ஒற்றை வெற்றியை உயர்த்திப் பிடிக்கும் நாளாக இந்த நாள் கருதப்படுகிறது.

சிங்கப்பூரின் வானளாவிய கட்டடங்கள் முதல் அயோத்தியின் நதிக்கரை வரை, இந்த ஆண்டு தீபாவளி எவ்வாறெல்லாம் புதிய கோணத்தில் பிரகாசிக்கிறது என்பதைக் காணலாம்.

வழக்கமான பாரம்பரியத்தோடு நில்லாமல் அதிநவீன தொழில்நுட்பம், பசுமைப் பாதுகாப்பு என முற்றிலும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது இந்த ஆண்டின் தீபாவளி.

பட்டாசுகளும் வெடிகளும் இல்லாமல், தீப ஒளியை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் ‘பசுமைத் தீபாவளி’ இன்னும் அதிகமாகப் பிரபலமடைந்து வருகிறது.

சமூக ஊடக வாழ்த்துகள் பெருகுகின்றன.

நமது சிங்கப்பூரில் ‘தீபாவளித் திருநாள் 2026’ என அந்தக் கொண்டாட்டத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவைச் சுற்றிய சாலைகளில் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு ஒளிவெள்ளம் பாய்ந்தோடி தீபாவளிப் பண்டிகையை அலங்கரிக்கும் வழக்கம் தொடரும் வேளையில், இந்த ஆண்டின் ஒளி அலங்காரங்கள் சீதையை ராமர் இலங்கையிலிருந்து மீட்டுவந்த வெற்றியைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன.

மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள மரபுடைமை நடைப்பயணமும் ‘லிட்டில் இந்தியா நிழற்படச் சவால்’ என்ற புதிய அங்கமும் இந்தத் தீபாவளியின் சிறப்பம்சங்கள்.

லிட்டில் இந்தியாவுக்கு வெளியிலும் ஜூ சியாட் ரோட்டில் சிந்தி இன மக்கள் தீபாவளியைக் கொண்டாட உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்தியாவின் புனித நகரான அயோத்தியில் ‘தீபோத்சவ்’ திருவிழா இம்முறை புதிய உலக சாதனை படைத்துள்ளது. இயற்கை முறையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களால் உருவாக்கப்பட்ட 2.6 மில்லியனுக்கும் அதிகமான ‘பசுமை அகல் விளக்குகள்’ சரயு நதிக்கரையை அலங்கரித்தன.

அத்துடன், நூற்றுக்கணக்கான வானூர்திகள் அயோத்தி வானில் ஒரே நேரத்தில் பறந்து, மின்னும் வண்ணமயமான ரங்கோலி வடிவங்களை விண்வெளியில் உருவாக்கிக் காட்டியது காண்போரின் கண்களில் வியப்பை விதைத்தது.

அதேபோல், ஜெய்ப்பூரின் ‘பிங்க் சிட்டி’யில் தீபாவளி விளக்கொளி அலங்காரம் இந்த ஆண்டு 11 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டடங்களைப் பாதுகாக்க முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும் எல்இடி விளக்குகள் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்க நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே பிரம்மாண்டமான முறையில் தீபாவளி கொண்டாடப்படும் இங்கிலாந்தின் லெஸ்டர் நகரத்தின் பெல்கிரேவ் சாலை ஒரு நவீன கலைக்கூடமாக மாறியுள்ளது.

கட்டடம் மற்றும் நடைபாதைகளில் நவீன மின்னிலக்க ரங்கோலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடந்து செல்லும் மக்களின் காலடிக்கு ஏற்ப மெய்நிகர் பூக்களும் விளக்குகளும் சிதறும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லெஸ்டரிலும் லண்டன் டிராஃபால்கர் சதுக்கத்திலும் மக்கும் தாவர இலைகளில் மட்டுமே சுடச்சுட இயற்கை இனிப்புகள் தீபாவளிக்காக வழங்கப்படுகின்றன.

தெற்காசிய உணவு, பானங்கள், குழந்தைகளுக்கான கேளிக்கை சவாரி போன்றவற்றைக் கொண்ட தீபாவளி கிராமம் காஸிங்டன் திடலுக்கு மீண்டும் வந்துள்ளது.

துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் அமைக்கப்பட்ட ‘ஒளி அரங்கம்’ பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்தப் பகுதியில் இவ்வாண்டு நவம்பர் 6 முதல் 10 வரை ஐந்து நாள்கள் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன.

அவற்றில் 600க்கும் மேற்பட்ட வானூர்திகளின் காட்சி, நேரடி இசை, ஒரு பண்டிகைச் சந்தை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் இடம்பெறும் என துபாய் சுற்றுலாத் தலம் தெரிவித்துள்ளது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ஆக்மென்ட்டட் ரியாலிட்டி’ தொழில்நுட்பம் வாயிலாக ‘ஸ்மார்ட் கண்ணாடி’ அணிந்து, தீபாவளி வரலாற்று நிகழ்வுகளைக் காணலாம்.

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் வடகிழக்கே அமைந்துள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளைக் கொண்ட பகுதியிலும் தீபாவளித் திருநாள் களைகட்டியது.

மூங்கில் வளைவுகளில் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைக்கும் பாரம்பரிய முறை அந்தத் தீவுகளில் இவ்வாண்டும் தொடர்ந்தது. 2026ன் சிறப்பம்சமாக அங்குள்ள மக்களின் ‘தீபாவளி நகர்’ கலைநிகழ்ச்சிகள் இணையவழியில் உலகம் முழுவதும் நேரலை செய்யப்பட்டன. இதன் மூலம் கனடா, லண்டன் மற்றும் நியூயார்க்கில் வாழும் புலம்பெயர் மக்கள் அந்தத் திருவிழாவில் நேரடி உணர்வோடு பங்கேற்றனர்.

தீபாவளி கொண்டாடப்படுவதற்குப் பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. கொடுமைகள் புரிந்த நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் அழித்தார். தீமை அழிந்த நாளை ‘தீபாவளி’ என மக்கள் மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி கொண்டாடினர்.

ராமாயண மரபின்படி, ராவணனை ராமர் வென்று சீதையுடன் அயோத்திக்குத் திரும்பியபோது மக்கள் விளக்குகளை ஏற்றி வரவேற்ற நாள்தான் தீபாவளி. சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் என்று ஒவ்வொரு சமயத்தினரும் வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்நாளைக் கொண்டாடுகிறார்கள்.

இருளை ஒளி வென்றதாகச் சித்திரிக்கப்படுவதால் விளக்குகள் இவற்றில் இடம்பெறுகின்றன. தீமை என்னும் இருள் அகற்றி மனிதநேயம் என்னும் ஒளி ஏற்றுவதையும் இது குறிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
தீபாவளி 2026தீபம்கொண்டாட்டம்