‘கிரேட்டர் சதர்ன் வாட்டர்ஃபிரண்ட்’ மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ள கெப்பல் மற்றும் தஞ்சோங் பகார் முனையங்களில் சுமார் 213 ஹெக்டர் நிலம் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரேட்டர் சதர்ன் வாட்டர்ஃபிரண்ட் பகுதியில் நில மீட்புத் திட்டம் வகுக்கப்படுவது இதுவே முதல் முறை. மேலும், முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம், ஏப்ரல் 8ஆம் தேதி அன்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டது.
சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த நகர மறுசீரமைப்பு ஆணையம் (யுஆர்ஏ), இடமாற்றம் செய்யப்பட்ட கெப்பல் மற்றும் தஞ்சோங் பாகர் முனையங்களில் முன்மொழியப்பட்ட நில மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இது கிரேட்டர் சதர்ன் வாட்டர்ஃபிரண்ட் திட்டத்திற்கு வழிவகுக்கும் வகையில், அப்பகுதியின் விரிவான மறுவளர்ச்சியைச் சாத்தியமாக்கும் இணைப்பு நிலத்தை உருவாக்கும் என்றும் கூறியது.
“இது, தற்போதுள்ள லெப்ரடார் மற்றும் ஹார்பர்ஃபிரண்ட் போன்ற பகுதிகளுக்கும், சிட்டி டெர்மினல்ஸ் அமைந்துள்ள பகுதிகளுக்கும், மெரினா பே பகுதிக்கும் இடையே தெற்குக் கடற்கரையோரமாக ஒரு நேரடி இணைப்பை வழங்கும்,” என்று யுஆர்ஏ கூறியது.
முன்மொழியப்பட்ட இந்த நில மீட்பு, கடலோரப் பாதுகாப்பு முயற்சிகளுக்கும் துணைபுரியும். ஏனெனில், நிலத்தை மீட்பதன் மூலம், உயர்ந்து வரும் கடல் மட்டம், உயர் அலைகள் மற்றும் புயல் அலைகளுக்கு எதிரான அப்பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்தும் உயரத்தில் ஒரு புதிய கடல் சுவரைக் கட்ட இயலும் என்று யுஆர்ஏ மேலும் கூறியது.
மரினா பேயின் அளவில் ஏறக்குறைய பாதியாக உள்ள அந்த மீட்கப்பட்ட நிலத்தின் சரியான பயன்பாட்டை அதிகாரிகள் வெளியிடவில்லை.
கெப்பல் மற்றும் தஞ்சோங் பாகர் முனையங்கள் 2027ஆம் ஆண்டுக்குள் துவாஸ் துறைமுகத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நில மீட்புப் பகுதி இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மரினா பே பயணக் கப்பல் மையத்திலிருந்து தொடங்கும் சிறிய அளவிலான முதல் கட்டத்தில், கூர்மையான முக்கோண வடிவ முனையுடன் நிலம் கடலுக்குள் நீண்டுள்ளது.
முக்கோண வடிவ நில அமைப்பு, எதிர்காலக் கடற்கரை மேம்பாட்டிற்கான தற்போதைய ஆய்வுடன் தொடர்புடையது என்றும், கூடுதல் விவரங்கள் தயாரானதும் பகிரப்படும் என்றும் யுஆர்ஏ தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்மொழியப்பட்ட 213 ஹெக்டர் நிலமானது, தாழ்வான ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைப் பகுதியை உயர்ந்து வரும் கடல் மட்டத்திலிருந்து பாதுகாக்கும் ‘லாங் ஐலேண்ட்’ பெரிய நில மீட்புத் திட்டத்திற்கு அருகில் அமையவுள்ளது.
மொத்தம் சுமார் 800 ஹெக்டர் பரப்பளவுள்ள மூன்று மீட்கப்பட்ட நிலப் பகுதிகள், மரினா கிழக்கிலிருந்து தானா மேரா வரை நீண்டு, வீடுகள், பொழுதுபோக்கு மற்றும் வணிக மேம்பாடுகளுக்கான நிலத்தை உருவாக்கும்.

