‘இசிபி’க்கு அப்பால் நிலமீட்புப் பணிகள் ஆண்டிறுதியில் தொடங்கும்

‘லாங் ஐலண்ட்’ நிலமீட்புத் திட்டம்

‘இசிபி’க்கு அப்பால் நிலமீட்புப் பணிகள் ஆண்டிறுதியில் தொடங்கும்

2 mins read
4512a489-ac51-4744-860f-6c3c75e0e05b
பிடோக் படகுத்துறையைச் சுற்றிய பகுதியில் ஆயத்தப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் (இசிபி) கடற்கரைக்கு அப்பால் நிலமீட்புக்கான ஆயத்தப் பணிகள் இவ்வாண்டு இறுதியில் தொடங்கவிருக்கின்றன.

அதன் பிறகு, பிடோக் படகுத்துறைக்குக் கிழக்கே உள்ள கடற்பகுதியில் மட்டுமே நீர்-விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்தப் பணிகளால் பல்லுயிர் பெருக்கத்திற்குச் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று கருதப்படுகிறது. குறிப்பாகப் பூங்காவில் முட்டையிடும், அழியும் தறுவாயில் உள்ள ‘ஹோக்ஸ்பில்’ ஆமைகள் பாதிக்கப்படக்கூடும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் கூறியுள்ளன.

தற்காலிகமாக இந்த நிலமீட்புத் திட்டத்திற்கு ‘லாங் ஐலண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. திட்டத்தின் மேல்விவரங்கள் இரு அமைப்புகளும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. திட்டப் பணிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

மீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படும் பிடோக் படகுத்துறையைச் சுற்றிய பகுதியில் ஆயத்தப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அமைப்புகள் தெரிவித்தன.

படகுத்துறையின் மேற்கே உள்ள பகுதியில் முதற்கட்டப் பணிகள் இவ்வாண்டு இறுதியில் தொடங்கும். இந்தப் பகுதியின் நீளம் 7 கிலோமீட்டர், இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 570 ஹெக்டர்.

படகுத்துறைக்குக் கிழக்கே உள்ள பகுதியில் இரண்டாம் கட்டப் பணிகள் இடம்பெறும். சிங்கப்பூர் ஏற்றுநடத்தும் பெரிய அளவிலான அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் நிறைவுற்ற பிறகு, பணிகள் தொடங்கும். 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகள் அவற்றில் அடங்கும். ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கிற்கு அப்பால் நீர் விளையாட்டுகளை நடத்த ஏதுவாக அவ்வாறு செய்யப்படுகிறது.

குறைந்தது 2029 வரை பிடோக் படகுத்துறைக்குக் கிழக்கே உள்ள கடற்பகுதியில் நீர்விளையாட்டுகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு, அறிக்கையொன்றில் தெரிவித்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

திட்டப் பணிகள் எப்போது நிறைவுறும் என்பதை அரசாங்க அமைப்புகள் குறிப்பிடவில்லை.

மொத்தத்தில், இந்தத் திட்டப் பணிகள் இடம்பெறவுள்ள கடற்பகுதியின் பரப்பளவு ஏறக்குறைய 725 ஹெக்டர். இது மரினா பே வட்டாரத்தைப் போன்று இரு மடங்கு பெரியது.

‘லாங் ஐலண்ட்’ திட்டத்தைத் திட்டமிடவும் வடிவமைக்கவும் செயல்படுத்தவும் பல பத்தாண்டுகள் ஆகும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பேச்சாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். திட்டத்தை உரிய நேரத்திற்குள் முடிப்பதை உறுதிசெய்ய நிலமீட்புப் பகுதிக்கு அருகே இந்தப் பணிகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

“பணிகள் நடைபெறும் வேளையில், ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கிற்கு அப்பால் தற்போது இடம்பெறும் நீர் சார்ந்த நடவடிக்கைகளின் மீதான தாக்கத்தைக் குறைக்க நாங்கள் ஆயத்தப் பணிகளைக் கட்டங்கட்டமாக மேற்கொள்கிறோம்,” என்றார் அவர்.

கிட்டத்தட்ட 155 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இரண்டாம் கட்டத்திற்கான தேதி, கால அட்டவணை உறுதிசெய்யப்பட்டவுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்று இரண்டு அமைப்புகளும் தெரிவித்தன.

பணிகள் நடைபெறும் காலத்தில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் பகுதியில் உள்ள கடற்கரைகள், உடற்பயிற்சிப் பாதைகள், தடங்கள் முதலியவற்றைப் பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார். சமூக ஊடகத்தில் அவர் அந்தக் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்