தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலமீட்புப் பணி சாங்கி கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைப் பாதிக்காது: அதிகாரிகள்

2 mins read
b3520426-5f26-4b86-9af6-7ac78734ab1f
சாங்கிக்கு அப்பால் சுமார் 193 ஹெக்டர் நிலப்பகுதி மீட்கப்படும். அது கரையோரப் பூந்தோட்டத்தைப் போன்று கிட்டத்தட்ட இரு மடங்கு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி ஏவியே‌ஷன் பார்க் விரிவாக்கத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள நில மீட்புப் பணிகள் பிரபலமான கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைப் பாதிக்கமாட்டா என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன.

திங்கட்கிழமை (ஜூலை 28) அவை வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

திட்டத்தால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் பாதுகாப்புத் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக அவை தெரிவித்தன. பொதுமக்களின் பார்வைக்கு அவை வருவதற்கு முன்னர் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதற்குரிய உடன்பாடுகள் தேவைப்படுவதாக இரு அமைப்புகளும் குறிப்பிட்டன.

நிலமீட்புப் பணிகளால் சாங்கியின் எழில் கொஞ்சும் கடலோரப் பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்வது பாதிக்கப்படுமா என்று இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

கடல்நீர் மட்டம் குறையும்போது மக்கள் கடல்வாழ் தாவரங்களையும் விலங்குகளையும் காணச்செல்வது வழக்கம்.

இயற்கை ஆர்வலர்கள் நியோ ஸியாவ்யுனும் ஜூலியன் பால் லீயும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் மனுவொன்றைக் கொடுத்திருந்தனர். மீட்கப்படும் நிலப்பகுதியின் அளவைக் குறைத்துக்கொள்ளுமாறு அவர்கள் அதில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சாங்கிக்கு அப்பால் சுமார் 193 ஹெக்டர் நிலப்பகுதி மீட்கப்படும் என்றும் அது கரையோரப் பூந்தோட்டத்தைப் போன்று கிட்டத்தட்ட இரு மடங்கு என்றும் ஜூலை 2ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதுவரை ஏறக்குறைய 1,440 பேர் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அரசாங்கம் உடன்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரகசியமற்ற தகவல்களைப் பொதுமக்கள் அணுகுவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்த மதிப்பீடுகளில் பெரும்பாலானவற்றைப் பொதுமக்கள் இணையத்தில் பார்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சாங்கி நார்த் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் நிலமீட்பு நடவடிக்கை குறித்தும் அவர்கள் மேல் விவரம் தந்தனர். சாங்கி பீச் பார்க்கில் (Changi Beach Park) உள்ள கார்நிறுத்தும் இடங்கள் 6, 7 ஆகியவை பாதிக்கப்படமாட்டா என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்