உறவுகளைக் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழா 2025

மொழியும் கலாசாரமும் குடும்பத்தின் அடிநாதம்

4 mins read
23b494cb-047c-4383-b339-acfe2219c177
இடமிருந்து: திரு டேனியல் தர்மராஜ், திருமதி ஏஞ்சலின் மலர், திரு ஜோயல் ஜெபதாஸ் சாலமன். தமிழ் கிறிஸ்துவக் குடும்பமாக, சமயத்தோடு பண்பாட்டையும் மொழியின் அடையாளத்தையும் தொடர்ந்து பேணுவது கூடுதல் உற்சாகம் என்றனர் இக்குடும்பத்தினர். - படம்: செய்யது இப்ராகிம்
multi-img1 of 2

திரைச்சீலை தொடங்கி முழு வீட்டையும் வண்ண ஒளியில் மிளிரச் செய்த கிறிஸ்துமஸ் அலங்கார அமைப்புகள்வரை  எதையுமே கடைத்தொகுதியில் வாங்கவில்லை திரு டேனியல் தர்மராஜ் குடும்பத்தினர்.

காலஞ்சென்ற பெற்றோர் விட்டுச்சென்ற பாரம்பரியங்கள்,  தனித்துவமான தமிழ்க் கலாசாரங்கள், வீடு முழுவதும் மணக்கும்  ருசியான உணவுகள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களையும் அரவணைக்கும் அன்பு  என ஆழமான நேசம் இழையோட, இக்குடும்பத்தினரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கின.

‘‘வாசல் தொடங்கி வீடு முழுவதும் மிளிரும் ஒளிமயமான அலங்காரங்கள் எல்லாம் என் மனைவி ஏஞ்சலின் மலர் கைவண்ணத்தில் உருவானவை. இவை ஒவ்வொன்றும், மறைந்த என் தாயார் விட்டுச்சென்ற தமிழ்க் குடும்ப வழமையின் கதைகளைப் பேசும்,’’ என்று பெருமையுடன்  சொன்னார்  திரு டேனியல், 62.

கிறிஸ்துமஸ் தினம் வந்தாலே மகிழ்ச்சி. அதிலும் தமிழ் கிறிஸ்துவக் குடும்பமாக, சமயத்தோடு பண்பாட்டையும் மொழியின் அடையாளத்தையும் தொடர்ந்து பேணுவது கூடுதல் உற்சாகம் என்றார் அவர்.

பல்லின சமூகச் சூழலில் வளர்ந்ததால் இளம் பருவத்தில் தமிழ் மொழியைப் பேச விழைந்ததில்லை என்ற திரு டேனியல், ஆயினும் அம்மா  வலியுறுத்தியதால் தமிழில் பேசத் தொடங்கியதாகச் சொன்னார்.

“அன்பு காட்டுவதில் தொடங்கி குடும்ப உறவுகளுக்கு நேரம் செலவிடுவது வரை மறைந்த என் தாயார் திருவாட்டி மார்கிரெட் ஜெயமணி கற்றுக்கொடுத்த விழுமியங்கள் இன்றும் என் வாழ்வை வளமாக்குகின்றன.

‘‘அம்மா பார்த்து மணமுடித்து வைத்த மனைவியும் நானும் ஆண்டுகள் பல கடந்தும், இன்றுவரை இந்தியக் குடும்பமாகவும் தமிழ்ப் பண்பாட்டு மணம் கமழவும் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவதற்கான எல்லா முயற்சிகளையும் தவறாமல் செய்து வருவது மேலும் சிறப்பு,’’ என்றார் அவர்.

தமிழில் வேதாகமம் வாசிப்பது, கிறிஸ்தவ தமிழ்க் கீர்த்தனைகள் பாடுவது, பாரம்பரிய உடைகள் அணிவது என்று குடும்பமாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும்போது, மொழியும், பண்பாடும் இறைவன் அருளிய  நல்லாசி என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார் அவர்.

பாதுகாப்புத் துறை சார்ந்த அதிகாரியாகப் பணிபுரியும் இவர், வேலையிடத்திலும் பல்வேறு வெளிநாட்டு ஊழியர்களுடன் உரையாடுகையில் தமிழில் பேசி நல்லுறவைப் பேணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு உடல்நலத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டதை நினைவுகூர்ந்த அவர், இந்த ஆண்டு குடும்பத்துடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவது தமக்கு இறைவன் அளித்த அன்பின் பரிசு என்றும் கூறினார்.

கிறிஸ்துமஸ் நாளில் அம்மா செய்யும் ‘புலுட் வாஜிக்’ உணவு மலேசியா வரை ருசிக்கும் என்றார் திரு ஜோயல் ஜெபதாஸ் சாலமன், 28.

அன்று தாம் பெரிதும் விரும்புவது கண்விழித்தவுடன் உணவு மேசையில் பிரியாணியைப் பார்ப்பதுதான் என்று கூறிய அவர் கிறிஸ்துமஸ் தினத்தில் தனக்கு வழங்கப்படும் குடும்பப் பொறுப்புகள் குறித்தும் விவரித்தார்.

‘‘வீட்டில் ஏணி இல்லாததால் பண்டிகை தினத்திற்கு முந்தைய நாள்களிலெல்லாம் அலங்கார விளக்குகளை உயரத்தில் பொருத்துவதற்கு அம்மாவுக்கு நான்தான் ஏணிப்படி,’’ என்று புன்னகையுடன் கூறிய ஜெபராஜ், விழா நாளில் வாழை இலையில் பரிமாறப்படும் அம்மா சமைத்த விருந்தைக் காலை தொடங்கி இரவுவரை பலமுறை  உண்டாலும் சலிக்காது என்றார்.

குறிப்பாக வீட்டுக்கு வருகை தரும் பல்லின நண்பர்கள் கண்ணில் நீர் மல்கக் காரசாரமான இந்திய உணவுகளை  ருசித்து மகிழ்வதும் மறக்க முடியாத நினைவுகள் என்றார் அவர்.

பணிக்குச் செல்வது ஒருபுறம் இருந்தாலும் குடும்பத் தலைவியாக வீட்டை நிர்வகிப்பது இனிமையானது என்ற கூறிய திருமதி ஏஞ்சல், 57, ‘‘சமைப்பது, விருந்தினரை உபசரிப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, அழகுபடுத்துவது என அந்த நன்னாளில்  எவ்வளவு மணிநேரம் வேலை நீண்டாலும் விழாக்காலங்களில் கிடைக்கும் தனித்துவமான ஆனந்தத்திற்கு இணையேதுமில்லை என்பதால் மாமியார் கற்றுக்கொடுத்த விருந்தோம்பல் எனும் பண்பே தாம் பிறருக்கு அளிக்கும் கனிவான கிறிஸ்துமஸ் பரிசு என்றார்.

தாய்மாமா வீட்டில் பாசம் மணக்கும் கோலாகலம்

மாமா வீட்டிற்கு செல்லாமல் தம் மகன்களின் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நிறைவடையாது என்றார் திருவாட்டி ரூத் குமாரவேலு.
மாமா வீட்டிற்கு செல்லாமல் தம் மகன்களின் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நிறைவடையாது என்றார் திருவாட்டி ரூத் குமாரவேலு. - படம்: ரூத்

அம்மா உயிருடன் இருக்கும்வரையில்  உடையோ உணவோ அலங்கார விரிப்புகளோ எதையும் வெளியே வாங்கியதாக நினைவில்லை  என்றார் அண்ணன் வீட்டு கிறிஸ்துமஸ் விழாவில் இணைந்த திருவாட்டி ரூத் குமாரவேலு, 60. 

தன் மகன்கள் இருவருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தங்கள் வீட்டில் நடைபெறும் கொண்டாட்டத்தைக் காட்டிலும் மாமா வீட்டில் ஒன்றுகூடுவதுதான் மிகவும் பிடித்தமானது என்றார் அவர்.

‘‘கிறிஸ்துமஸ் என்றாலே தேவாலயத்தில்தான் பொழுது தொடங்கும். அக்காலத்தில் காலை தொடங்கி மாலை வரை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அம்மா சொல்லுவார்கள். ஆனால் இப்போதுள்ள பிள்ளைகளின் வழக்கமே வேறு.

‘‘இந்த ஆண்டு கிறிஸ்துமசுக்கு என் பிள்ளைகள் என்னைச் சமைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். உணவகத்திலிருந்து கிறிஸ்துமஸ் உணவு தருவிக்கப்படும். 

‘‘காலம் மாறலாம்; கொண்டாடும் முறை மாறலாம். ஆனால் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் உறவுகளை ஒன்றுசேர்க்கும் கிறிஸ்துமஸ் விழா, இறைவன் உணர்த்திய பாசம், பரிவு, இரக்கம் ஆகியவற்றின் உன்னத வரம்,’’ என்றார் திருவாட்டி ரூத்.

குறிப்புச் சொற்கள்