தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசாங்க அமைப்புகளின் கணக்குகளில் குறைபாடுகள்: சுட்டிக்காட்டிய தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம்

2 mins read
5c7a0e6f-0787-43cf-bc3d-2009406207ac
பியுபி ஒப்பந்தமொன்றின் தொடர்பிலான உத்தேச முறைகேடுகளை விசாரிக்கக் காவல்துறையிடம் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

சிங்கப்பூரின் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் மேற்கொண்ட வருடாந்தரக் கணக்குத் தணிக்கையின்போது அரசாங்க அமைச்சுகளிலும் அமைப்புகளிலும் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அலுவலகம் 2024-25 நிதியாண்டுக்கான அதன் அறிக்கையைச் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) வெளியிட்டது.

குறைபாடுகள் கண்டறியப்பட்ட ஆவணங்களில் ஒன்று தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபியின் (PUB) $7.95 மில்லியன் மதிப்புள்ள ஓர் ஒப்பந்தம் சம்பந்தப்பட்டது.

அந்த ஒப்பந்தம் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான உயிர்க்கொல்லி மருந்தை விநியோகிப்பது தொடர்பானது.

உயிர்க்கொல்லி மருந்து உரிய தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதைக் காட்டும் பகுப்பாய்வுச் சான்றிதழ்களை ஒப்பந்ததாரர் சமர்ப்பிக்க வேண்டும். சான்றளிக்கப்பட்ட ஆய்வுக்கூடங்களிலிருந்து அவை பெறப்பட்டிருக்க வேண்டும்.

பியுபி சமர்ப்பித்த ஆறு மின்னிலக்கச் சான்றிதழ்களிலும் உத்தேசக் குறைபாடுகள் இருந்ததைத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் கண்டுபிடித்தது.

ஒப்பந்ததாரர் கொடுத்த அசல் ஆவணங்களுக்கும் அவற்றுக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருந்தன.

தவறான தகவல்கள் சமர்ப்பிக்கப்படுவது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று அலுவலகம் தெரிவித்தது.

பியுபி அந்த விவகாரம் குறித்து உள்-விசாரணையைத் தொடங்கியிருப்பதாக அறிக்கையொன்றில் நிதியமைச்சு தெரிவித்தது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் காவல்துறையிடம் புகாரளிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

நீர்முகப்புப் பணிகளுக்கான $6.75 பெறுமானமுள்ள மற்றோர் ஒப்பந்தத்தில் உத்தேச முறைகேடுகள் குறித்து ஏற்கெனவே காவல்துறையிடம் பியுபி புகார் கொடுத்துள்ளது.

தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்ட முக்கியமான 25 குறைபாடுகளில் இந்த இரண்டு சம்பவங்களும் அடங்கும்.

மொத்தம் 132 குறைபாடுகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தேசியச் சுற்றுப்புற வாரியம் கூடுதலாகப் பணம் கொடுத்தது, கடல்துறை, துறைமுக ஆணையம் ஒப்பந்தப்புள்ளியொன்றைத் தவறாக மதிப்பிட்டது முதலியவையும் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளில் அடங்கும்.

உள்துறை அமைச்சின் அறிவியல் தொழில்நுட்ப அமைப்பின் (HTX) அலுவலகப் புதுப்பிப்பு ஒப்பந்தத்தின் கணக்குவழக்கில் குளறுபடிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின்கீழ் வழங்கப்பட்ட 15 மானியங்களுக்குத் தகுதி அடிப்படைகள் சரிபார்க்கப்படவில்லை என்பதும் கணக்குத் தணிக்கையில் தெரியவந்தது.

“பொதுப் பணத்தை நிர்வகிக்கும்போது நம்பிக்கை, பொறுப்பு, வெளிப்படைத்தன்மை முதலியவற்றைக் கட்டிக்காப்பது முக்கியம்,”என்று நிதியமைச்சு சொன்னது.

குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அமைப்புகள் அவற்றை மறு ஆய்வு செய்து அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சு தெரிவித்தது.

அரசாங்க அமைப்புகள் மூன்று அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

ஒப்பந்த நிர்வாகம் மற்றும் கொள்முதல், வருவாய் நிர்வாகம், கணக்குத் தணிக்கைக்குச் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் உத்தேச முறைகேடுகள் ஆகியவையே அந்த மூன்று அம்சங்கள்.

அறிக்கை அதிபரிடம் ஜூலை 2ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தின் பார்வைக்குத் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) அது அனுப்பப்பட்டது.

குறிப்புச் சொற்கள்