தேசிய நூலக வாரியம் வழங்கும் இலவச நூல்களைப் பெற மூன்று மணி நேரம்வரை காத்திருக்க நேரிடலாம் என்று நூல் பிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 13), ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) ஆகிய இரண்டு நாள்களிலும் 100 விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தில் கிட்டத்தட்ட 60,000 நூல்களை வாரியம் இலவசமாகக் கொடுக்கிறது.
நூலகத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரும் 10 நிமிடங்களுக்குள் 10 நூல்கள்வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
அதை முன்னிட்டு சனிக்கிழமை (செப்டம்பர் 13) மிகப் பெரிய கூட்டம் நூலகத்தில் திரண்டது. இலவச நூல்களை எடுக்க ஒரு மணி நேரம்வரை வரிசையில் காத்திருக்க நேரலாம் என்ற நூல் பிரியர்களிடம் கூறப்பட்டது.
நூல்களை எடுத்துச்செல்ல ஒரு சிலர் தள்ளுவண்டிகள், பைகள் ஆகியவற்றைத் தவிர பயணப் பெட்டிகளையும் கொண்டு வந்தனர்.
சிலர், வரிசையின் நடுப்பகுதிக்கு வர 20 நிமிடங்கள் பிடித்தது என்றும் வேறு சிலர் வரிசையின் முதல் இடத்திற்கு வர 15 நிமிடங்கள் எடுத்தது என்றும் கூறினர்.
காலை 10 மணிக்கெல்லாம் நூலகத்திற்குச் சென்ற ஒருவர், மூன்று மணி நேரம்வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தம்மிடம் கூறப்பட்டதாகத் தெரிவித்தார்.
வரிசை எங்கு தொடங்குகிறது என்பதைக் குறிக்கும் தகவல்களும் இல்லை என்றும் நூலகத்தின் ஊழியர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் சரிவர நடைபெறவில்லை என்றும் சிலர் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
நூலக ஊழியர்கள் சொன்னபடி வெவ்வேறு வரிசைகளில் மாறி மாறி நின்றதாகச் சொன்ன ஒருவர் அரை மணி நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டதாகக் கூறினார்.
கனத்த மழை பெய்தபோதும் வரிசையில் நின்றவர்களைக் கூரையின் கீழ் அழைத்துவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று சிலர் குறிப்பிட்டனர்.
தேசிய நூலக வாரியம் ஒவ்வோர் ஆண்டும் நூல்களை இலவசமாகக் கொடுக்கிறது. இந்த முறை வாரியம் அதை மிகப் பெரிய அளவில் நடத்துகிறது.
தேசிய நூலக வளாகத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நூல்களை எடுத்துச்செல்லலாம்.
நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் உள்ள நூல்கள் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன.