தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வரும் சனி, ஞாயிறு இருநாள்களும் விக்டோரியா ஸ்திரீட் தேசிய நூலகத்தில் பொதுமக்கள் நூல்களைப் பெறலாம்

இதுவரை இல்லாத அளவில் 60,000 பழைய நூல்களை வழங்குகிறது தேசிய நூலக வாரியம்

2 mins read
fa0806a8-5ef2-4d5e-b3cd-ae9c5fbf15ac
கடந்த ஆண்டில் ஏறக்குறைய 6,000 பேர் நூலகத்தின் இலவச நூல்களைப் பெற்றனர். - படம்: இணையம்

தேசிய நூலக வாரியம் அதன் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு 60,000 பழைய நூல்களை இலவசமாக வழங்க உள்ளது.

செப்டம்பர் 13 முதல் 14 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தில் முதல் தளத்தில் நூல் அன்பளிப்பு இடம்பெறும்.

நூல்களைப் பெற விரும்பும் பார்வையாளர்கள், நூலக அடையாள அட்டை, என்எல்பி மின்அட்டை அல்லது க்யூஆர் குறியீடு ஒருநாள் அனுமதி அட்டையை வருடி, நூல்களைப் பெறலாம்.

ஒருவர் 10 நூல்கள்வரை பெறலாம். அதிர்ஷ்டக் குலுக்கில் 60 வெற்றியாளர்களுக்குப் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. தேசிய நூலக வாரியம் பரிசு பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.

பல கிளைகளில் இடம்பெற்ற முந்தைய நூல் வழங்குதல் போலன்றி, இந்த ஆண்டு ஒரே இடத்தில் பெரிய அளவிலான நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நூலக வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

நூலகத்தின் சேகரிப்புகளில் இருந்த இந்நூல்கள் பொதுவாக பழைய பதிப்புகள். நூல்கள் வகைமைகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும். சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், சிங்கப்பூர் நூல்களும் வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள், தங்களிடம் உள்ள பழைய நூல்களை வழங்கலாம். சமய நூல்கள், பாடநூல்கள், சஞ்சிகைகள், ஆண்டு அறிக்கைகள், டிவிடி, சிடி முதலியவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

தேசிய நூலக வாரியம், பல ஆண்டுகளாக 130 உள்ளூர் சமூகப் பங்காளிகளுக்கும் அனைத்துலக நிறுவனங்களுக்கும் பழைய நூல்களை வழங்கியுள்ளது.

“வாசகர்களின் பலர் நூல்களைக் கையில் ஏந்திப் படிப்பதை இன்னும் ரசிக்கிறார்கள் என்பதை நூலகம் அறியும்.

“தேசிய நூலக வாரியப் வழங்கும் பிற அம்சங்களுடன் சேர்ந்து, இந்த நிகழ்வு சிங்கப்பூரர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறோம்,” என்றார் தேசிய நூலக வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி இங் செர் போங்.

குறிப்புச் சொற்கள்