தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிவேக இணையத்திற்கான ஆகப் பெரிய திட்டம்

2 mins read
713f8237-3c51-4c08-befa-de77c69432f5
இந்த கடலடிக் கம்பிவடத் திட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: பிக்சா பே

இந்தியாவின் மின்னிலக்கக் கட்டமைப்புத் துறையில் பல்வேறு புதிய உத்திபூர்வ முயற்சிகளில் முதலீடு செய்யவுள்ளதாக என்டிடி டேட்டா (NTT DATA) நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன் முதற்படியாக நொடிக்கு 200 டெராபிட்டுகளைக் கடத்தும் 8,100 கிலோமீட்டர் நீள கம்பிவடங்களை (Cables) அந்நிறுவனம் அமைக்கவுள்ளது. கடலுக்கு அடியில் செல்லும் இந்தக் கம்பிவடங்கள் சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைக்கும். அதிவேக இணைய இணைப்புகளை உறுதிசெய்யும் இத்திட்டம் ஆசிய அளவில் அமைக்கப்படும் ஆகப் பெரிய கட்டமைப்பு.

இத்திட்டம் அதிவேக வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவின் மின்னிலக்கப் பொருளியலில் முக்கிய உள்கட்டமைப்பாகப் பங்காற்றும் என்று ஜப்பானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் என்டிடி நிறுவனம் தெரிவித்தது.

என்டிடி நிறுவனம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் முதலீடு செய்து வருவதையும் இந்தியாவில் 500 மெகாவாட் மின்தேக்குதிறனுடன் (capacitance) கூடிய ஆகப் பெரிய தரவு மையத்தை நிறுவியுள்ளதையும் சுட்டியது.

வரும் ஆண்டுகளில் மின்தேக்குதிறனை மேலும் 400 மெகாவாட் வரை அதிகரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் அது அனைத்துலக அளவில் தரவு மையங்களை நிறுவியும் நிர்வகித்தும் வருகிறது.

இந்தியாவின் பெங்களூரு நகரில் புத்தாக்க மையத்தைக் கொண்டுள்ள என்டிடி நிறுவனம், செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் மாதிரி (Digital Twin), குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய தொழில்நுட்பத் திட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளது.

அனைத்துலக அளவில் 11 நாடுகளில் புத்தாக்க மையங்களைக் கொண்டுள்ள என்டிடி நிறுவனம், செயற்கை நுண்ணறிவுடன் தீர்வுகள் வழங்கும் திட்டங்களில் பணியாற்ற, நிபுணத்துவத் திறனாளர்களை வேலைக்கு எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள் உள்ளிட்டவற்றுக்காக உலகளவில் 2023 முதல் 2027ஆம் ஆண்டு வரை எட்டு டிரில்லியன் ஜப்பானிய யென் (S$71.24 பில்லியன்) மதிப்பிலான முதலீடுகளைச் செய்வதாகவும் என்டிடி நிறுவனம் கூறியுள்ளது.

புத்தாக்கம், செயல்திறன், வாய்ப்புகளுக்கான மையமாகவும் முன்னணிச் சந்தையாகவும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டுள்ள தொழில்நுட்பத் தீர்வுகள், தரவு உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட துறைகளுக்கான தேவைகளை தங்களது நிறுவனம் பூர்த்திசெய்யும் என்றும் இந்தியாவிலுள்ள என்டிடி டேட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவினா‌ஷ் ஜோ‌ஷி நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்