கொவிட்-19 நெருக்கடிநிலையால் தாமதமடைந்த ‘பிடிஓ’ திட்டங்கள் நிறைவு

2 mins read
6a25aeb2-3c48-4140-b1c9-793612af2a0d
பொங்கோல் பாயிண்ட் கோவ் குடியிருப்பைச் சுற்றிப் பார்த்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொவிட்-19 நெருக்கடிநிலையின் காரணமாகத் தாமதமடைந்த ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் தொடர்பான 92 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) தெரிவித்தார்.

தாமதமடைந்த பிடிஓ திட்டங்களில் கடைசி இரண்டு திட்டங்கள் இம்மாதம் நிறைவடைந்தன.

ஒட்டுமொத்த அடிப்படையில், கட்டுமானப் பணிகள் தாமதமடைந்த வீடுகளில் 75,800 க்கும் அதிகமான வீடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சர் லீ கூறினார்.

கடைசி இரண்டு திட்டங்களான பொங்கோல் பாயிண்ட் கோவ், கெம்பாஸ் ரெசிடன்சஸ் ஆகியவற்றின் இரண்டாம் கட்ட வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தன.

18,000க்கும் அதிகமான வீடுகளை உள்ளடக்கிய 22 வீடமைப்புத் திட்டங்கள் 2024ஆம் ஆண்டில் நிறைவடைந்தன.

அவற்றுள்,17 திட்டங்கள் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக தாமதமடைந்தன.

மற்றொரு திட்டம் வேறு காரணங்களுக்காகத் தாமதமடைந்தது.

எஞ்சிய நான்கு வீடமைப்புத் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நிர்ணயிக்கப்பட்டதுபோல் நடந்தேறின.

பொங்கோல் பாயிண்ட் கோவ் குடியிருப்பின் இரண்டாம் கட்ட வீடுகளின் உரிமையாளர்கள் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து வீட்டுச் சாவிகளைப் பெறத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

நியூ பொங்கோல் சாலையில் 1,179 வீடுகள் உள்ளடங்கிய ஆறு குடியிருப்புக் கட்டடங்கள் கட்டப்பட்டன.

அவற்றுள், ஐந்து குடியிருப்புக் கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிறைவடைந்தன.

கடைசிக் கட்டடம் 12 மாதத் தாமதத்துக்குப் பிறகு இம்மாதம் தயாரானது.

கொவிட்-19 நெருக்கடிநிலையின் காரணமாக கிருமிப் பரவலைத் தடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, பிடிஓ வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

எனவே, அவற்றின் கட்டுமானப் பணி நிறைவு தாமதமடைந்ததாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது.

பொங்கோல் பாயிண்ட் கோவ் குடியிருப்பின் இரண்டாம் கட்ட வீடுகள் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு விடப்பட்டன.

முதல் கட்ட வீடுகள் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு விடப்பட்டன.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1,172 வீடுகள் தயாராகின.

ஜனவரி 15ஆம் தேதி நிலவரப்படி, விற்பனை செய்யப்பட்ட 1,109 வீடுகளில் 59 விழுக்காட்டு வீடுகளின் சாவிகளை வீட்டு உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கெம்பாஸ் ரெசிடன்சஸ் குடியிருப்பின் கடைசி கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் ஆறு மாதத் தாமதத்துக்குப் பிறகு இம்மாதம் நிறைவடைந்தன.

ஜனவரி 15ஆம் தேதி நிலவரப்படி அந்தக் குடியிருப்பின் 555 வீடுகளில் 37 வீடுகளின் உரிமையாளர்கள் வீட்டுச் சாவிகளைப் பெற்றுக்கொண்டுவிட்டதாக வீவக கூறியது.

தற்போது 110 வீடமைப்புத் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக வீவக கூறியது.

இது ஓராண்டுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 95ஆக இருந்தது.

2025ஆம் ஆண்டுக்குள் 27 பிடிஓ திட்டங்களுக்கு உட்பட்ட 17,000 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்