விடிந்தால் பொங்கல் திருநாள்.
இதுபோன்ற தமிழர் பண்டிகைகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது லிட்டில் இந்தியாதான். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் உற்சாகத்தைத் தர லிட்டில் இந்தியா தவறுவதே இல்லை.
அதிலும் குறிப்பாக, கேம்பல் லேன் சாலையில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது, பரபரப்பிலும் வேண்டிய பொருள்களைப் பொறுமையாகப் பார்த்து வாங்குவது என பொங்கல் களைகட்டிவிட்டதைக் காண முடிந்தது.
இவ்வாண்டு பொங்கல் திருநாள் வாரநாளில் வந்தாலும் அதற்கான முன்னேற்பாடுகளுக்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் கொண்டாட்டத்திற்கு எவ்வாறு ஆயத்தமாகியுள்ளனர் என்பது பற்றி அவர்களில் சிலரிடம் கேட்டறிந்தது தமிழ் முரசு.
“வழக்கம்போல் இவ்வாண்டும் காலையில் பொங்கல் வைத்துவிட்டு கோவிலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார் திரு விக்னேஸ்வரன்.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காகவே ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் திரு விக்னேஸ்வரன் குடும்பத்தினரின் ஒரே நோக்கம் பெற்றோருடன் இணைந்து கொண்டாடுவதுதான்.
பொங்கல் என்பதை வெறும் கொண்டாட்டமாகப் பார்க்காமல் அடுத்த தலைமுறையினருக்கு மரபைக் கொண்டுசேர்க்கும் திருநாளாகப் பார்க்கும் ஜெயசுதா சமுத்திரன் - கெளத்தமன் ஹரிதாஸ் இணையர், அதனைப் பெரிய அளவில் கொண்டாட ஊக்குவிக்கின்றனர்
தொடர்புடைய செய்திகள்
“பிள்ளைகளுடன் வெளியே பொங்கலிட்டு, அவர்களுக்கு அந்த அனுபவத்தை ஏற்படுத்தித் தருவதில் எங்களுக்கு உற்சாகம்,” என்ற திருவாட்டி ஜெயசுதா, “பிள்ளைகள் வளர வளர பண்டிகை பற்றி புதிய கேள்விகளுடன் வருவர்.
அவற்றுக்கெல்லாம் சரியாக பதில் சொல்லவேண்டும்,” என்ற பொறுப்பையும் சுட்டினார்.
“கடைசி நேரத்தில் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. மஞ்சள் கொத்து, இஞ்சி போன்றவற்றை முதல்நாள் வாங்குவதுதான் நல்லது. தீபாவளிபோல் பொதுவிடுமுறையாக இல்லாததால், அந்த பண்டிகை உணர்வுக்காகவே பொங்கலுக்கு முதல்நாள் வரவேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.
‘விற்பனை விறுவிறுப்பாக இருக்கிறது. ஆனால், இன்னும் அதிகக் கூட்டத்தை எதிர்பார்க்கிறோம்,” என்றார் ‘தி பெல் அண்ட் பேசில்ஸ்’ பூக்கடை ஊழியர் திருவாட்டி கோகிலா. இவ்வாண்டுப் பொங்கலுக்காக தள்ளுபடிகளையும் நிறைய வித்தியாசமான பொருள்களையும் கொண்டுவந்துள்ளதாக அவர் கூறினார்.
நேரடியாக கடைக்கு வந்து பொருள்களை வாங்கும் போக்கையும், இணையம் மூலமாகப் பொருள்களை வாங்கும் போக்கையும் சுட்டிய திருவாட்டி கோகிலா, இரண்டுக்கும் நல்ல வரவேற்பு உள்ளதாகச் சொன்னார்.

