‘சிங்கப்பூரில் 25 ஆண்டுகாலச் சட்டச் சீர்திருத்தம்’ (25 Years of Legal Reform in Singapore) என்ற நூல் தொகுப்பு செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வெளியீடு கண்டது.
சிங்கப்பூரின் நவீன நீதித்துறையும் சட்டக் கட்டமைப்பும் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் ‘எஸ்ஜிலா200’ (SGLaw200) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நான்கு தொகுப்புகள் அடங்கிய இந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2000 முதல் 2025 வரை மேற்கொள்ளப்பட்ட முக்கியச் சட்ட மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் இந்நூல் தொகுப்பு ஆவணப்படுத்தியுள்ளது.
முதல் தொகுப்பில் குற்றவியல், பொதுச் சட்டம், குடும்பச் சட்டம் ஆகியவையும், இரண்டாவது தொகுப்பில் உரிமையியல் சட்டம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
மூன்றாவது தொகுப்பு அனைத்துலகச் சர்ச்சைகளைத் தீர்த்தல் குறித்தும், நான்காவது தொகுப்பு சட்டப் புத்தாக்கங்கள் மற்றும் கொவிட்-19 நெருக்கடிநிலை குறித்தும் விவரிக்கின்றன.
கரையோரப் பூந்தோட்டத்தில் அமைந்திருக்கும் ‘ஃபிளவர் ஃபீல்டு’ மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், மூத்த அமைச்சர் கா.சண்முகம், சட்ட அமைச்சர் எட்வின் டோங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் யிப் மான் இந்நூல் வரிசையின் தலைமை ஆசிரியராக விளங்குகிறார்.
அரசாங்கக் கொள்கை வகுப்பாளர்கள், நீதிபதிகள், சட்டப் பணியாளர்கள், கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள் எனப் பல தரப்பினரின் பார்வைகளை இந்நூல் ஒருங்கிணைக்கிறது.
சிங்கப்பூரின் சட்டச் சீர்திருத்தப் பயணத்திற்குப் பின்னால் இருக்கும் சிந்தனைகளையும் சமூகப் பரிசீலனைகளையும் எடுத்துக்காட்டும் வண்ணம் இந்நூல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவற்றில் 200க்கும் மேற்பட்ட மசோதாக்களைச் சட்ட அமைச்சு கையாண்டது என்றும் விழாவில் உரையாற்றிய மூத்த அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் அரசாங்கம் எவ்வாறு தொடர்ந்து மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி, கடினமான முடிவுகளை மேற்கொண்டுள்ளது என்று இந்நூல் வெளிப்படுத்துகிறது,” என்றார் அவர்.
பல ஆண்டுகளாகச் சட்ட அமைச்சில் பணியாற்றி வந்துள்ள அதிகாரிகளின் அர்ப்பணிப்புக்கு இந்நூல் வரிசை ஒரு சிறந்த சமர்ப்பணம் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.
சட்ட அமைச்சராக 17 ஆண்டுகள் சேவை ஆற்றிய மூத்த அமைச்சர் சண்முகத்தின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, சிங்கப்பூர் சட்டச் சீர்திருத்த வரலாற்றின் முக்கியக் காலகட்டத்திற்கு அவர் தலைமை தாங்கியதாக திரு டோங் குறிப்பிட்டார்.
“இந்தத் தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பல சீர்திருத்தங்களில் அவருடைய முத்திரையும் நேரடிக் கவனமும் பதிந்துள்ளன,” என்று திரு எட்வின் டோங், மூத்த அமைச்சர் சண்முகத்தின் பங்கை விழாவில் பதிவிட்டார்.
இந்நூல் தொகுப்பு அச்சுப் பதிப்பில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்களுக்கும் சட்ட மாணவர்களுக்குமான வளமாக இந்நூல் தொகுப்பு விளங்கும்.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் பின்னர் இந்த நூல்கள் நூலகங்களிலும் வைக்கப்படும் என்று சட்ட அமைச்சு தெரிவித்தது.

