பிஸ்னஸ் டைம்ஸ் நாளேட்டின் ‘பி.டி. குளோபல்’

வட்டார, உலகளாவிய வர்த்தகச் செய்திகளுக்கான புதிய தளம் தொடக்கம்

3 mins read
615acd79-451a-4e5a-8d3f-6c2bab63762a
‘பிஸ்னஸ் டைம்ஸ் குளோபல்’ தொடக்க விழாவில் (இடமிருந்து) பிஸ்னஸ் டைம்ஸ் குளோபல் ஆசிரியர் ஓங் ஹுவீ ஹுவீ, எஸ்பிஎச் மீடியா ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகக் குழுமத்தின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங், எஸ்பிஎச் மீடியா தலைவர் கோ பூன் வான், மனிதவள அமைச்சர் டான் சீ லெங், எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட், எஸ்பிஎச் மீடியா துணைத் தலைமை நிர்வாக அதிகாரி குவெக் யூ சுவாங், பிஸ்னஸ் டைம்ஸ் ஆசிரியர் சென் ஹுய்ஃபென். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தத்தை (DEFA) இந்த ஆண்டு நிறைவுசெய்யும் இலக்கைச் சிங்கப்பூர் நெருங்கிவிட்டதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் மனிதவள அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்காசியாவிற்குள் தொழில் விரிவாக்கம் செய்வதைவிட மேற்கத்திய சந்தைகளுக்குச் செல்வது எளிதாக இருப்பதாகக் கருதும் வட்டார நிறுவனங்களுக்கு, இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும்.

உலகின் முதல் பெரிய, வட்டார அளவிலான மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தம் என்று கூறப்படும் இது, 2030ஆம் ஆண்டிற்குள் வட்டாரத்தின் மின்னிலக்கப் பொருளியலை 2 டிரில்லியன் வெள்ளியாக இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை (ஜனவரி 26) நடைபெற்ற ‘பிஸ்னஸ் டைம்ஸ் குளோபல்’ (பி.டி. குளோபல்) தொடக்க விழாவின் சிறப்புக் குழுக் கலந்துரையாடலில் பேசிய டாக்டர் டான், வட்டாரத்தில் நிலவும் வர்த்தகப் பிளவுகள் குறித்த கவலைகளின் தொடர்பாகப் பேசினார்.

எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் மனிதவள அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங்.
எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் மனிதவள அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

இந்த ஆண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பை பிலிப்பீன்ஸ் ஏற்கவுள்ள நிலையில், மின்னிலக்க வர்த்தகத்தை ஒருங்கிணைக்கவும், வட்டாரத்தின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும் இடையூறுகளை நீக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் முக்கிய நிதி நாளிதழான ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ தொடங்கியுள்ள புதிய முன்னெடுப்பான ‘பி.டி. குளோபல்’, தனித்துவமான தென்கிழக்காசியக் கண்ணோட்டத்துடன் வட்டார, உலகளாவிய வர்த்தகச் செய்திகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆசியான் வர்த்தகத் தகவல்கள், முன்னணி நிறுவனங்களின் தனிப்பட்ட கண்ணோட்டங்கள், வளர்ந்து வரும் போக்குகள் குறித்த ஆழமான செய்திகளை வாசகர்கள் எதிர்பார்க்கலாம்.

இது குறித்துப் பேசிய ‘பி.டி. குளோபல்’ ஆசிரியர் ஓங் ஹுவீ ஹுவீ, நுண்ணறிவு, செல்வாக்கு, தாக்கம் (Intelligence, Influence and Impact) ஆகியவற்றை வழங்குவதே இத்தளத்தின் நோக்கம் என்றார்.

‘பி.டி. குளோபல்’ ஆசிரியர் ஓங் ஹுவீ ஹுவீ.
‘பி.டி. குளோபல்’ ஆசிரியர் ஓங் ஹுவீ ஹுவீ. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவு முதல் பணவீக்கம், புவிசார் அரசியல் வரை பல்வேறு விவகாரங்களில் உயர் நிர்வாக அதிகாரிகளிடம் கருத்துக்கணிப்பு நடத்தும் ‘ஆசியான் இன்டெலிஜென்ஸ்’ போன்ற முக்கிய ஆய்வுகள் இதில் இடம்பெறும்.

மேலும், ஆசியாவின் முக்கியக் குடும்பத் தொழில் நிறுவனங்கள், அவற்றின் வாரிசுரிமைத் திட்டங்கள் (Succession Strategies) குறித்த ‘பிஹைண்ட் த நேம்’ (Behind the Name) என்ற ‘பிடி’யின் தொடர் நிகழ்ச்சியும் இத்தளத்தில் இடம்பெறும்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து, சிங்கப்பூரும் வியட்னாமும் வட்டார அளவில் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதை ஆராய, ஹோ சி மின் நகரில் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனர்களுடன் ஒரு வட்டமேசைக் கலந்துரையாடலை ‘பிடி குளோபல்’ நடத்தவுள்ளது.

கொள்கை வகுப்பாளர்கள், பெருநிறுவனத் தலைவர்கள், வட்டார வர்த்தக வல்லுநர்களை இந்தத் தொடக்க விழா ஒன்றிணைத்தது. தேசிய ஆய்வு அறநிறுவனத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான ஹெங் சுவீ கியட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

குழுக் கலந்துரையாடலின்போது பேசிய அமைச்சர் டான், செயற்கை நுண்ணறிவை மனித ஆற்றலை மேம்படுத்தும் ஒரு கருவியாகக் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு என்பது அச்சுறுத்தலன்று. மாறாக செயல்திறனை அதிகரிக்கவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தவும் உதவும் ஒரு காரணி அது என்றார் அவர்.

தொடக்க விழாவின் ஓர் அங்கமாகச் சிறப்புக் குழுக் கலந்துரையாடல் நடைபெற்றது.
தொடக்க விழாவின் ஓர் அங்கமாகச் சிறப்புக் குழுக் கலந்துரையாடல் நடைபெற்றது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

நிலையற்ற உலகில், சிங்கப்பூரின் நம்பகத்தன்மையும் நடுநிலைத் தன்மையுமே நாட்டின் மிகப் பெரிய சொத்து என்று குறிப்பிட்ட அவர், 2027ல் ஆசியானின் தலைமைப் பொறுப்பைச் சிங்கப்பூர் ஏற்கவுள்ள நிலையில், உலக வர்த்தகத்தில் அது ஒரு நிலைப்படுத்தும் சக்தியாகத் திகழும் என்றார்.

வட்டாரத்தின் இளம் பணியாளர்கள், ஆசியானின் நடுநிலைமையின் நன்மைகள், அமெரிக்கா - சீனா பதற்றங்களுக்கு மத்தியில் விநியோகச் சங்கிலியைப் பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பேச்சாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

கலந்துரையாடலின் இறுதியில் பேசிய திரு ஹெங், பொது, தனியார் துறைகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு யுகத்தில், ஆசியானின் பாரம்பரியமான, படிப்படியான பரிணாம வளர்ச்சி அணுகுமுறை இனி போதுமானதாக இருக்காது என்றும் மிகவும் துணிச்சலான, வேகமான உத்திகள் தேவை என்றும் அவர் எச்சரித்தார்.

வேகமாக மாறிவரும் இன்றைய பொருளியல் சூழலில், சிக்கலான இயக்கவியலை நடைமுறைக்கு உகந்த வர்த்தகத் தகவல்களாக மாற்றுவதையும், ஆசியானை உலக அரங்கில் ஒரு சிந்தனைத் தலைமைத்துவமாக முன்னிறுத்துவதையும் ‘பிடி குளோபல்’ நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்