புற்றுநோய், பக்கவாதம், இதயநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு ஆளாகும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கும் நோக்கில், ‘வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிரிட்டிகேர் நிதி’ திட்டம் (Migrant Worker Criticare fund) தொடங்கியுள்ளது.
அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தின் தொடர்பில் டிசம்பர் 6ஆம் தேதி இந்த நிதித் திட்டம் தொடங்கப்பட்டது. வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 410,000 வெள்ளி நிதி திரட்டும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை ‘ரே ஆஃப் ஹோப்’ தொண்டு நிறுவனம் நிர்வகிக்கும்.
இதன்மூலம் முதற்கட்டமாக குறைந்தது 20 வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இத்திட்டம் பொதுமக்கள், பெருநிறுவனங்கள், சிறிய, நடுத்தரத் தொழில்கள், அறநிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை எதிர்நோக்குகிறது.
இந்த நிதித் திட்டம், முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் அந்தியா ஓங், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் தொடர்ந்து பணியாற்றும் வின்சென்ட் இங் இருவரின் எண்ணத்தில் உருவாகியுள்ளது.
ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்றிய ஊழியர் பிங் நவடோ, கருப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பணமின்றித் தவித்ததும், 15 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய ஃபஸ்லி இலாஹி, பெருங்குடல், கல்லீரல் புற்றுநோய்க்கு ஆளாகித் தவித்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள் என்றும், அதுவே இந்த நிதித் திட்டம் தொடங்கத் தூண்டுகோலாக அமைந்தது என்றும் நிறுவனர் இருவரும் குறிப்பிட்டனர்.
அவர்களின் மருத்துவச் செலவுகளுக்கு நிதி திரட்டியபோதுதான் இந்தச் சவாலை எதிர்நோக்க, நீண்டகாலத் திட்டத்தின் தேவையும் முக்கியத்துவமும் தெரியவந்தது என்றார் வின்சென்ட்.
பொது நிதி திரட்டில் பயனடைந்த பிங் நவடோ, “முதலில் நோய் கண்டறியப்பட்டபோது, உடல் நலத்தைவிட இதனை பொருளியல் ரீதியாக எவ்வாறு அணுகப்போகிறோம் என்பதே மலைப்பாக இருந்தது. சமூகப் பங்களிப்பு கிடைத்திருக்காவிட்டால் என் நிலைமை முற்றிலும் மோசமாகியிருக்கும்” என்று கண்ணீர் மல்கப் பகிர்ந்தார்.
நிதி திரட்டும் திட்டம் அறிமுகம் செய்ததுடன், தற்போதுள்ள காப்பீட்டுத் திட்டங்களுடன், தொழிலாளர்கள், முதலாளிகள், வணிகங்களின் ஒத்துழைப்புடன் தீவிர நோய்க்கான காப்புறுதியைக் கட்டாயமாக்கப்பட முடியுமா எனும் கேள்வியை மையமாக வைத்து குழு விவாதம் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அதில், வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகள், சிரமங்கள், அறியாமை, விழிப்புணர்வின் முக்கியத்துவம், காப்புறுதி வழங்குவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள், அவற்றை எதிர்கொள்ளும் சாத்தியக்கூறுகள் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டன.
“இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒருவனாக, வெளிநாட்டு ஊழியர்களை, குறிப்பாக இந்தியர்களைப் பார்க்கும்போது, அவர்களில் என்னைப் பார்க்கிறேன். அவர்கள் நம் தேசத்தின் கட்டமைப்பிற்கு அளிக்கும் பங்கு அளப்பரியது. அவர்களுக்கு இவ்வகைப் பாதுகாப்பு வழங்குவது மிகவும் அவசியம்”, என்றார் கலந்துரையாடலை வழிநடத்தியவரும், இத்திட்டத்திற்கு பங்களிப்பவருமான தனேஷ் திரு.
பொதுச் சுகாதாரத் துறை முதுகலை மாணவரும், ஆய்வு உதவியாளருமான தனேஷ், “நிதி திரட்டு முதற்கட்ட நடவடிக்கை என்றாலும், அதனைத் தொடரவும், நீண்ட காலக் கொள்கை உருவாக்கத்திற்கு உதவவும் இது குறித்த ஆய்வுகளையும் ஆலோசனைகளையும் மேற்கொள்ள சமூகம் மற்றும் நிபுணர்களின் பங்களிப்பும் அவசியம்”, என்றார்.