வட்டாரத்தில் பசுமைத் திட்டங்களுக்கான தொடக்க நிதியாக அரசாங்கம் ஒதுக்கியுள்ள US$500 மில்லியன் (S$646 மில்லியன்) நிதியில் ஒரு பகுதியை சிங்கப்பூர் வரும் மாதங்களில் பயன்படுத்தவுள்ளது. 2023ல் அறிவிக்கப்பட்டிருந்த திட்டம் ஒன்றை முன்னெடுத்துச் செல்ல புதிய அலுவலகம் ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன் புதன்கிழமை (மே 7) நடந்த மாநாடு ஒன்றில் இதனைத் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் அரசாங்கத்திடமிருந்து தொடக்க நிதியாக US$500 மில்லியன் வரை பயன்பாட்டை ஒருங்கிணைக்க ஃபாஸ்ட்-பி அலுவலகம் அமைக்கப்படும் என்பதைப் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் அவர்.
இப்புதிய அலுவலகம், ஆசியாவில் தூய எரிசக்தி உள்கட்டமைப்புக்கும் நிதி வழங்க உதவும்.
2023ல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட திட்டமான ஃபாஸ்ட்-பியின் இலக்கு, சிங்கப்பூர் அரசாங்கத்தாலான தொடக்க நிதியைப் பயன்படுத்தி பிற தரப்புகளிடமிருந்தும் நிதியை அதிகரிப்பதே.
இந்த US$500 மில்லியன், மானியங்களையும் கடனையும் போன்று தொடக்க நிதியாக வரும். இந்த நிதி, இதர அரசாங்கங்கள், பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள், கொடை அமைப்புகள் உள்ளிட்ட இதர பங்காளிகளிடமிருந்து வெள்ளிக்கு வெள்ளி நிகராக பங்களிப்பை ஈடுசெய்யும்.
இதர வணிக, கொடை பங்காளித்துவ அமைப்புகளின் உதவியுடன் மொத்தம் US$5 பில்லியன் திரட்டுவதே இலக்கு.
இந்த நிதி மூன்று அம்சங்களுக்குப் பயன்படுத்தப்படும். புதைபடிம எரிபொருளிலிருந்து தூய எரிசக்திக்கு மாறுவதற்கான முயற்சிகளை வேகப்படுத்துவது, பசுமை முதலீடுகளை அதிகப்படுத்துவது, சிமெண்ட், எஃகு உற்பத்தி போன்ற துறைகளில் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது ஆகியனவே அவை.
தொடர்புடைய செய்திகள்
புதைபடிம எரிபொருளை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் வானிலையில் மாற்றம் ஏற்படுவதுடன் காட்டுத்தீ, வெள்ளம், கடல்மட்டம் உயர்வு போன்ற வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன.