கிட்டத்தட்ட 60 மூத்தோர், பாலர் பள்ளிச் சிறார்களையும் தொண்டூழியர்களையும் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) சிங்கப்பூர் ராட்டினத்தில் உற்சாகமாகச் சுற்றி வந்தனர்.
மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனமான ‘பிசிஎஃப்’ ஏற்பாட்டில் இவ்வாண்டின் நன்கொடை வாரம் சிங்கப்பூர் ராட்டினம் நிகழ்ச்சி மண்டபத்தில் இந்த அர்த்தமுள்ள நடவடிக்கையுடன் தொடங்கியது.
தொடர்ந்து களைகட்டும் ‘எஸ்ஜி60’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சிறார்களுக்கும் மூத்தோருக்கும் இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்த திங்கட்கிழமை காலை மேலும் பல நடவடிக்கைகள் நடந்தேறின.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் .
தேசிய தினப் பேரணி உரையில் ‘நாம் முதல்’ என்ற மனப்பான்மை பற்றி பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியதை திருவாட்டி டியோ மீண்டும் நினைவுகூர்ந்தார்
“இதன்வழி (பிசிஎஃப்) வலுவான சமூகங்களை உருவாக்கும் நோக்கம் இந்த மனப்பான்மையை உயிர்ப்பிக்கிறது,” என்றார் அவர்.
‘நாம்’ என்ற மனப்பான்மை ஒரு தனிமனிதனிடமிருந்து தொடங்குகிறது என்றும் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
அவருடன் ‘பிசிஎஃப்’ நன்கொடை மேலாண்மை நிர்வாக குழு உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் யோ வான் லிங்கும் மூத்த துணை அமைச்சர் சிம் ஆனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“இன்றைய மூத்தோர், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை வளப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்காலத் தலைமுறையினரையும் வளர்க்க கடமைப்பட்டுள்ளோம்,” என்று ‘பிசிஎஃப்’ தலைமை நிர்வாக அதிகாரி விக்டர் பே கூறினார்.
சமூக உணர்வை வலுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த ஆண்டு ‘பிசிஎஃப்’ நன்கொடை வாரம் அறிமுகம் கண்டது.
‘கனிவன்பு என்னிடமிருந்து தொடங்குகிறது’ (Kindness Begins with Me) எனும் கருப்பொருளுடனான நன்கொடை வாரம் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நீடிக்கும்.
அடுத்த நான்கு நாள்களுக்கு தீவு முழுவதும் உள்ள ‘பிசிஎஃப்’ மூத்தோர் பராமரிப்பு நிலையங்களும் பாலர் பள்ளிகளும் இதர நடவடிக்கைகளில் ஈடுபடும்.
இவ்வாண்டின் நன்கொடை வார நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 35,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் மூத்தோருக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளை வழிநடத்தவிருக்கும் 3,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களில் ஒருவரான ஜஸ்விந்தர் கவுர், 48, கடந்த மூன்று ஆண்டுகளாக ‘பிசிஎஃப்’ அறநிறுவனத்துடன் இணைந்து தொண்டுபுரிந்து வருகிறார்.
“பொதுவான வேலை நேரத்திலிருந்து விலகி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தன்னார்வத் தொண்டு செய்து மக்களை மகிழ்ச்சிப்படுத்துவது ஒரு நல்ல உணர்வு,” என்றார் அவர்.