35,000 படுக்கைகளுடன் கூடிய புதிய வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்கள்

தங்குவிடுதிகளுக்கு 2026இல் நில ஒதுக்கீடு

35,000 படுக்கைகளுடன் கூடிய புதிய வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்கள்

2 mins read
b86a077a-5f53-4ae8-a3ad-bcbaa90b5f73
துக்காங் இன்னொவேஷன் லேனில், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய தரநிலைகளுக்கேற்ப கட்டப்பட்ட மனிதவள அமைச்சின் முதல் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி இந்த ஆண்டு திறக்கப்பட்டது. - கோப்புப் படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளைக் கட்ட 2026ல் மூன்று நிலப்பகுதிகளை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

லோக் யாங் வே, காலி பாத்து, லோரோங் லாடா ஹித்தாம் ஆகிய பகுதிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் இணைந்து திங்கட்கிழமை (மார்ச் 30) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த மூன்று பகுதிகளிலும் மொத்தமாக 35,000 படுக்கை வசதிகளுடன் கூடிய தங்குவிடுதிகளைக் கட்டலாம். இது வெளிநாட்டு ஊழியர்களுக்கான இருப்பிட வசதியைப் அதிகரிக்கும்.

ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற துங்காங் தங்குவிடுதியின் திறப்பு விழாவிற்கு வந்திருந்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங்,  மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் மூவரும் அங்குத் தங்கியிருப்போருடன் கலந்துரையாடினர்.
ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற துங்காங் தங்குவிடுதியின் திறப்பு விழாவிற்கு வந்திருந்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங், மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் மூவரும் அங்குத் தங்கியிருப்போருடன் கலந்துரையாடினர். - படம்: த.கவி

வெளிநாட்டு ஊழியர்க்கு மேம்படுத்தப்பட்ட தங்குமிட வசதிகள்

இந்தத் தங்குமிட விடுதிகள் வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்படும். அவர்களுக்கு வசதியான, பயனுள்ள வாழ்க்கைச் சூழலை உறுதிசெய்யப் பல்வேறு வசதிகளையும் சேவைகளையும் வழங்கும் வகையில் அமையும்.

இதற்கான நில விற்பனை முகவராக ஜேடிசி செயல்படும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் லோக் யாங் வே (Lok Yang Way) பகுதியில் 2.84 ஹெக்டர் பரப்பளவில் 5,000 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான விற்பனை விவரங்கள் மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் காலி பாத்து பகுதியின் கட்டம் ஒன்று கட்டுமானத்தில் (Gali Batu Phase 1) 10,000 படுக்கைகள் கொண்ட தங்குவிடுதி அமைப்பதற்கான 3.96 ஹெக்டர் நிலப்பகுதி விற்பனைக்கு விடப்படும்.

2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு அல்லது 2027ன் முதல் காலாண்டில் லோரோங் லாடா ஹித்தாம் பகுதியின் கட்டம் ஒன்று கட்டுமானத்தில் (Lorong Lada Hitam 1) 15,000 படுக்கைகள் கொண்ட மிகப் பெரிய தங்குமிடம் அமைப்பதற்கான 10.7 ஹெக்டர் பரப்பளவு இடம் விற்பனைக்கு வரும்.

இந்த மூன்று இடங்களும் 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் பொது ஒப்பந்தப்புள்ளி மூலம் ஒதுக்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் ஒப்பந்தப்புள்ளித் தொகுப்பை $185.30 கட்டணத்தில் (ஜிஎஸ்டியுடன்) https://go.gov.sg/jtc-pbd-tp என்ற இணையப்பக்கத்தில் வாங்கலாம் என்று ஜேடிசியின் இணையப்பக்கத் தகவல் தெரிவித்தது.

இந்தப் புதிய அறிவிப்புகள் தவிர்த்து, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கட்டட கட்டுமான ஆணையத்தால் ஏற்கெனவே இரு நிலப்பகுதிகள் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

டெருசான் எட்ஜ் (Terusan Edge) பகுதியில் 3,200 படுக்கைகள் கொண்ட இடத்திற்கான ஏல விற்பனை பிப்ரவரி 27ஆம் தேதி முடிவடைந்தது. கிராஞ்சி குளோஸ் (Kranji Close) பகுதியில் 7,000 படுக்கைகள் கொண்ட இடத்திற்கான ஏல விற்பனை இவ்வாண்டு மே 21ஆம் தேதி முடிவுறும்.

ஏலக்குத்தகை எடுப்போர் மனிதவள அமைச்சு நிர்ணயித்துள்ள தற்போதைய தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய வேண்டும். ஊழியர்களுக்கான தங்குமிடத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போதுமான படுக்கை வசதிகள் இருப்பதை அரசாங்கம் தொடர்ந்து உறுதிசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்