புதிய பரிந்துரைகள் ஏப்ரல் 2025 முதல் படிப்படியாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, திருத்தியமைக்கப்பட்டுள்ள ‘மெடிஷீல்டு லைஃப்’ மருத்துவக் காப்புறுதித் திட்டம் சிறந்த மருத்துவப் பாதுகாப்பை வழங்கும்.
சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களைத் தாண்டி மற்ற இடங்களில் பெறப்படும் பராமரிப்பை உள்ளடக்கும் வகையில் திங்கட்கிழமை (நவம்பர் 11) நாடாளுமன்றத்தில் ‘மெடிஷீல்டு லைஃப்’ காப்புறுதிச் சட்டத்தில் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் ‘மெடிஷீல்டு லைஃப்’ மருத்துவக் காப்புறுதியின் பாதுகாப்பு விரிவடையவுள்ளது.
கட்டுப்படியாகும் சந்தா, உயரும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள், சொத்துள்ள ஆனால், பணக்கார ஏழை தனிநபர்களுக்கான ஆதரவு போன்ற பிரச்சினைகள் குறித்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை எழுப்பினர்.
அதிகளவிலான மருத்துவக் கட்டணங்களிலிருந்து சிங்கப்பூரர்களைச் சிறந்த முறையில் பாதுகாக்க மெடிஷீல்டு லைஃப் மன்றம் கடந்த மாதம் அளித்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பின்னர் இந்தத் திருத்தம் இடம்பெற்றுள்ளது. நோயாளிகள் புதிய வகையான பராமரிப்பு, சிகிச்சைகளைப் பெறவும் விரிவுபடுத்தப்பட்ட காப்புறுதிப் பாதுகாப்பு உதவும்.
அக்டோபர் நடுப்பகுதியில் மெடிஷீல்டு லைஃப் மறுஆய்வுக் குழு, உள்நோயாளிகளுக்கான கட்டணக் கோரிக்கை வரம்பை அதிகரிப்பது, மேம்பட்ட வெளிநோயாளிப் பாதுகாப்பு, உயிரணு, திசு, மரபணு சிகிச்சை போன்ற மருத்துவ ரீதியாக பயனுள்ள, கட்டுப்படியாகக்கூடிய செலவுமிக்க சிகிச்சைகளின் உள்ளடக்கத்தைப் பரிந்துரைத்தது.
அதிகரித்து வரும் செலவுகள், மூப்படையும் மக்கள்தொகை ஆகியவற்றுக்கு இடையில் வெளிநோயாளி சிகிச்சை, சமூகம், வீடு அடிப்படையிலான பராமரிப்பை நோக்கி சுகாதாரச் சேவை மாறிவரும் வேளையில் இந்தப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, சந்தா தவிர்க்க முடியாமல் உயரும். ஆனால், அந்த உயர்வுக்கு அதிகபட்சம் 35 விழுக்காடு என வரம்பு விதிக்கப்படும். 2025 ஏப்ரல் முதல் மூன்று ஆண்டுகளில் படிப்படியாக உயர்வு அமையும்.
அரசாங்கம் அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.