பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கிற்கு எதிராக வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்துள்ள ஒழுங்குமுறை வழக்கு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக திரு சிங் தற்போது வழக்கறிஞராகப் பணியாற்றவில்லை.
சிங்கப்பூர் நீதிமன்ற இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விசாரணைப் பட்டியலில், தவறிழைக்கும் வழக்கறிஞர்களைப் பணியிடைநீக்கம் செய்யவோ அல்லது வழக்கறிஞர் பதிவேட்டிலிருந்து நீக்கவோ அதிகாரம் கொண்ட ‘மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு’ இவ்வழக்கை விசாரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், நீதிபதி கண்ணன் ரமேஷ், நீதிபதி சீ கீ ஓன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வழக்கில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கவிந்தர் புல் தலைமையிலான ‘டிரூ அண்ட் நேப்பியர்’ நிறுவனக் குழுவும், திரு சிங்கைப் பிரதிநிதித்து பீட்டர் கத்பர்ட் லோ தலைமையிலான ‘பீட்டர் லோ சேம்பர்ஸ்’ குழுவும் முன்னிலையாகின்றன.
நாடாளுமன்ற விசாரணைக் குழு முன்னிலையில் திரு சிங் பொய்யுரைத்ததாக அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இத்தீர்ப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் $14,000 அபராதத் தொகையைச் செலுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அவர் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டு, ஜனவரி மாதம் 15ஆம் தேதி அப்பதவியிலிருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டார்.
சிங்கப்பூர் சட்டத் தொழில் சட்டத்தின்படி, மோசடி அல்லது நேர்மையற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தானாகவே ஒழுங்குமுறை விசாரணையைத் தொடங்க வேண்டும். அதன்படி, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மார்ச் மாதம் 4ஆம் தேதி இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாக வழக்கறிஞர் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கின்மூலம் வழக்கறிஞர் பதிவேட்டிலிருந்து நீக்கப்படுதல், $100,000 வரை அபராதம் அல்லது கண்டனம் ஆகிய தண்டனைகள் அவருக்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, பாட்டாளிக் கட்சியின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதற்காக அக்கட்சியின் மத்தியச் செயற்குழு அவருக்குக் கண்டனக் கடிதம் அனுப்பியிருந்தது. இருப்பினும், கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று நடைபெற்ற கட்சித் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று, பிரித்தம் சிங் மீண்டும் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

