சிங்கப்பூரரான 32 வயது ஆடவர் மீது, குழந்தையைத் துன்புறுத்தியது தொடர்பில் 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட வழக்கில் புதிய வழக்கறிஞர் அந்த ஆடவரைப் பிரதிநிதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த ஆண் குழந்தையின் கழுத்தைப் பலமுறை நெரித்ததுடன் அலமாரியில் துணியைத் தொங்கவிடும் கொக்கியில் குழந்தையை அவர் தொங்கவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆடவரின் பெயரையோ பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளங்களையோ வெளியிட அனுமதி இல்லை.
அந்த ஆடவருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு குறித்துத் தகவல் இல்லை. இருப்பினும் இந்த வழக்கு குடும்ப வன்முறை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் சார்பாக வழக்கறிஞர் ஜினோ ஹர்தியால் சிங் முன்னர் வாதிட்டார். ஆனால், அக்டோபர் 15ஆம் தேதி அவர் அந்த வழக்கிலிருந்து விலகினார்.
திங்கட்கிழமை (அக்டோபர் 27) நடந்த வழக்குக்கு முந்தைய கலந்துரையாடலில் மூத்த வழக்கறிஞர் அமரிக் சிங் கில், எஸ் ராமானுஜன் ஆகியோர் ஆடவரைப் பிரதிநிதித்தனர்.
சென்ற ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அடுக்குமாடி வீடு ஒன்றில் அந்த ஆடவர் ஆண் குழந்தை ஒன்றைப் பராமரித்தார். அந்தக் குழந்தையின் வயது அப்போது 9 முதல் 11 மாதங்களாக இருந்தது. குழந்தையைத் துன்புறுத்தியது தொடர்பில் கடந்த செப்டம்பரில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குழந்தையின் முகத்தில் மிதித்தது, தண்ணீர் வாளிக்குள் பிள்ளையை அழுத்தியது, பலமுறை கழுத்தை நெரித்தது, தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுமுட்டச் செய்தது, பிள்ளையின் உள்ளாடையை அலமாரியில் துணிகளைத் தொங்கவிடும் கொக்கியில் பொருத்தி அக்குழந்தையைத் தொங்கவிட்டுக் கதவைச் சாத்தியது, குழந்தையின் முகத்தில் குத்தியது என 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் ஆடவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ S$8,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
வழக்கிற்கு முந்தைய அடுத்த கலந்துரையாடல் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும்.

