ஐஎச்எச் ஹெல்த்கேர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

ஐஎச்எச் ஹெல்த்கேர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

06 Nov 2026 - 12:44 pm

1 mins read

ஐஎச்எச் ஹெல்த்கேர் நிறுவனம் தனது வர்த்தக ஆதரவுச் சேவைகளை ஒருங்கிணைப்பதால் ஊழியர்கள் ஏறக்குறைய 400 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் அலுவலகங்களைச் சேர்ந்தவர்கள்.

இது குறித்து அந்த மருத்துவக் குழுமம் புதன்கிழமை (நவம்பர் 4) அறிக்கை வெளியிட்டது.

“ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்கள் சிலர் மாற்றி அமைக்கப்பட்ட பணிகளுக்குச் செல்வர். அதே வேளையில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 76,000 பேரில் கிட்டத்தட்ட 0.5 விழுக்காட்டினர் பணியிலிருந்து வெளியேறுவர்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

சுகாதார நிபுணர்கள், மருத்துவச் சேவைகள், நோயாளிகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் குழுக்களைச் சேர்ந்த்தோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைகளிலும் சுகாதார வசதிகளிலும் நோயாளிகளுக்குத் தரமான பராமரிப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்தது.

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உட்பட 10 நாடுகளில் 190 மருத்துவ வசதிகளை ஐஎச்எச் நிறுவனம் இயக்குகிறது. இவற்றில் 89 மருத்துவமனைகளும் அடங்கும்.

சிங்கப்பூரில் பார்க்வே, கிளென்ஈகிள்ஸ், மவுன்ட் எலிசபெத் ஆகிய மருத்துவமனைகளில் ஐஎச்எச் ஹெல்த்கேர் நிறுவனம் செயல்படுகிறது.

குறிப்புச் சொற்கள்