மீடியாகார்ப் நிறுவனத்தில் ஆட்குறைப்பு; 93 ஊழியர்கள் பாதிப்பு

1 mins read
f133ca1a-24a9-4af1-89f6-3be81ac09d2e
எந்தெந்தப் பிரிவுகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது என்பது குறித்த தகவலை மீடியாகார்ப் அதன் அறிக்கையில் குறிப்பிடவில்லை.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மீடியாகார்ப் நிறுவனத்தில் 93 ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக மாறிவரும் ஊடகச் சூழல், பதற்றமான பொருளியல் நிலவரம், நிச்சயமற்ற சந்தை உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

93 ஊழியர்கள் என்பது மீடியாகார்ப் நிறுவனத்தின் ஊழியர் அணியில் ஏறத்தாழ மூன்று விழுக்காட்டுக்கு மேல்.

எந்தெந்தப் பிரிவுகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது என்பது குறித்த தகவலை மீடியாகார்ப் அதன் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இம்மாத இறுதிக்குள் மீடியாகார்ப் நிறுவனத்திற்குள் உள்ள மாற்று வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவர்கள் மாற்று வேலையை உறுதிசெய்யாவிட்டால் நிறுவனத்தைவிட்டு ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் விலக வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகள் வேலை செய்தனர் என்பதைப் பொறுத்து நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஓர் ஆண்டு சேவைக்கு ஒரு மாத ஊதியம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 25 மாதச் சம்பளம் அல்லது 250,000 வெள்ளிவரை நிதி உதவி வழங்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலை தேட உதவி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்துதரப்படும் என்று மீடியாகார்ப் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்