லஸாடாவில் ஆட்குறைப்பு; சிங்கப்பூரிலும் பாதிப்பு

ஊழியரணியில் 5% ஆட்குறைப்பு எனத் தகவல்

லஸாடாவில் ஆட்குறைப்பு; சிங்கப்பூரிலும் பாதிப்பு

2 mins read
12478f67-d1d8-44d7-9164-8a09785b4ec1
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தற்போதுள்ள விதிமுறைகளின்படி, தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கி ஆதரிக்க நிறுவனம் கடமைப்பட்டுள்ளதாக லஸாடாவின் பேச்சாளர் கூறினார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வட்டார மின்வர்த்தக நிறுவனமான லஸாடா, தென்கிழக்காசியாவில் அதன் ஊழியரணியில் 5 விழுக்காட்டை ஆட்குறைப்பு செய்திருக்கிறது.

சிங்கப்பூரிலும் ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு ஆளானதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை.

ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து விவரம் அறிய லஸாடாவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது. தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில வேலைகள் மறுஆய்வு செய்யப்படுவதாக லஸாடாவின் பேச்சாளர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் நிறுவனம் நேரடியாகப் பேச்சு நடத்தும். அவர்கள் பரிவுடனும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அணுகப்படுவார்கள்,” என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தற்போதுள்ள விதிமுறைகளின்படி, தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கி ஆதரிக்க நிறுவனம் கடமைப்பட்டுள்ளதாக லஸாடாவின் பேச்சாளர் கூறினார். 

லஸாடாவின் போட்டி நிறுவனமான ‌ஷாப்பி, இம்மாதத் தொடக்கத்தில் உலக அளவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது. அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதாகக் கடந்த மாதம் தெரிவித்தது. மின்வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அது, உள்ளூர் மளிகைப் பொருள் விநியோகத்திலிருந்து அனைத்துலகப் பொருள் ஏற்றுமதிக்குத் தனது கவனத்தை மாற்றியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியது.

மனிதவள ஆலோசனை நிறுவனமான எலிடெஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெரிக் தியோ, ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்துக் கருத்துரைத்தார். மின்வர்த்தகத் தொழில்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டுவருவதாக அவர் கூறினார். ஆனால், மிகவேகமாக ஊழியர்களை வேலைக்கு எடுத்தல், அதிக மானியங்களைப் பெறுதல், எந்த விலையைக் கொடுத்தாவது வளர்ச்சியை எட்டுதல் எனும் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றி லசாடா செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு, ஊழியர்களுடன் நேரடியாகப் பேசிவருகிறது. லசாடா ஒன் அலுவலகம், பிராஸ் பசா ரோட்டில் உள்ளது.

உணவு, பானத் துறை ஊழியர் சங்கத்துடன் அணுக்கமாய்ப் பணியாற்றுவதாக லசாடா தெரிவித்தது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதை உறுதிசெய்யவும் அந்த நடவடிக்கையைப் பொறுப்புடன் கையாளவும் சங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக அது சொன்னது. ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து லசாடா முன்கூட்டியே தெரிவித்துவிட்டதாக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கரதாஸ் எஸ்.சாமி கூறினார்.

குறிப்புச் சொற்கள்