சிங்கப்பூர் பாதுகாப்பு விருது விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த விழா கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதியன்று சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிங்கப்பூரின் முன்னணி பாதுகாப்புச் சேவை நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டன. விருது வழங்கும் நிகழ்ச்சியில் 450க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அவர்களில் அரசாங்கப் பங்காளிகள், தொழில்துறைத் தலைவர்கள், விருது பெறுபவர்கள் அடங்குவர். விருது வழங்கும் விழாவுக்கு சிங்கப்பூர் பாதுகாப்புச் சேவை நிறுவனங்களுக்கான சங்கம் ஏற்பாடு செய்தது.
சிறப்பாகச் செயல்படும் பாதுகாப்புச் சேவை நிறுவனங்களை அடையாளம் காண்பதுடன் நம்பகமான, தரமான பாதுகாப்புச் சேவை நிறுவனங்களை மக்களுக்குத் தெரிவிக்க இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கலந்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு மெல்வின் யோங், திருவாட்டி கெசேன்ட்ரா லீ, திருவாட்டி இயோ வான் லிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாதுகாப்புத் துறைக்கு மிகச் சிறந்த பங்களிப்பு அளித்ததற்காகப் பாதுகாப்புச் சேவை ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் திரு ஸ்டீவ் டானுக்கு விருது வழங்கப்பட்டது.
பாதுகாப்புத் துறை உன்னத விருதை நான்கு நிறுவனங்கள் பெற்றன. செர்டிஸ், சொவேரஸ் பிரைவேட் லிமிடெட், சேண்ட்ஸ் குளோபல் பிரைவட் லிமிடெட், ஒன்சிஸ்டம்ஸ் டெக்னோலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை உன்னத விருது பெற்றன. தொடர்ந்து 2வது ஆண்டாக ஆகச் சிறந்த அலெக்சாண்டர் ஹென்சன் பாதுகாப்பு முகவை விருதை செர்டிஸ் பெற்றது. அது மேலும் 13 விருதுகளைப் பெற்றது.

