சிங்கப்பூரில் உள்ள இடைநிலை மறுவாழ்வு இல்லங்களிலோ சமூகக் கண்காணிப்புத் திட்டங்களிலோ உள்ள கைதிகள் கல்வி நிலையங்களுக்குச் சென்று பாடங்களைக் கற்க அனுமதிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சில்லறை வர்த்தகம், உணவுச் சேவைகள் ஆகிய துறைகளில் வேலை செய்வதற்குத் தேவையான திறன்களைக் கைதிகள் கற்றுக்கொள்வதற்கு ஏற்ற பாடத்திட்டங்களை வகுக்கவிருப்பதாக மஞ்சள் நாடா அமைப்பு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தெரிவித்தது.
புதிய திட்டம் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வாழ்க்கைத்தொழில் உருமாற்றத் திட்டத்தின்கீழ் அறிமுகம் செய்யப்படுவதாக மஞ்சள் நாடா அமைப்பு தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அறிவித்தது.
இவ்வாண்டு மே மாதத்திலிருந்து டிசம்பர் வரை சுற்றுப்புறச் சேவைகள் நிபுணருக்காக நடத்தப்பட்ட முன்னோடித் திட்டம் வெற்றிபெற்றதை அடுத்து கைதிகளுக்கான புதிய திட்டம் நடப்புக்கு வருகிறது.
சுற்றுப்புறச் சேவைகள் நிபுணத்துவத் திட்டத்தில் சாங்கி சிறைச் சாலையில் தங்கள் பயிற்சியைத் தொடங்கி தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அதைத் தொடர்ந்தனர்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற கைதிகள் சிறைச்சாலையிலிருந்து இடைநிலை மறுவாழ்வு இல்லங்களுக்கு மாற்றப்பட்டனர். வேறு சிலர் சமூக அடிப்படைத் திட்டங்களின் ஒரு பகுதியாக வீடுகளில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் சமூகக் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டனர்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் கூடுதல் கைதிகள் பிடித்தமான துறையில் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை மஞ்சள் நாடா அமைப்பு விரிவுபடுத்தவிருக்கிறது.
பலதுறைத் தொழிற்கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் கைதிகளுக்குக் கூடுதல் கல்வித் திட்டங்கள் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பெரும்பாலான சிறைக் கைதிகளுக்கு மேற்கல்வியைத் தொடர வாய்ப்புகள் கிடைக்காமல் போவதால் புதிய திட்டம் அவர்களுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று மஞ்சள் நாடா அமைப்பு சொன்னது.
முன்னோடித் திட்டத்தில் கல்வி கற்ற கைதிகள் பெரியளவில் பயனடைந்தனர் என்றும் உண்மையான வேலைச் சூழலுக்கு ஏற்ற திறன்களைக் கற்றுக்கொண்டனர் என்றும் அது குறிப்பிட்டது.
நேரடியாகக் கல்வி நிலையத்துக்குச் சென்று கற்றதன் மூலம் சில மாதங்களுக்குப் பதிலாக சில வாரங்களில் கைதிகளால் புதிய திறனைக் கற்க முடிந்ததாக மஞ்சள் நாடா பகிர்ந்துகொண்டது.

