தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகாரிகளைப்போல் நடித்து $10.6 மில்லியன் மோசடி

2 mins read
657e4506-bf93-4c86-a44c-368ea090a56b
மோசடிக்காரர்கள் காட்டிய போலி ஆவணங்களில் சில. - படங்கள்: சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் நாணய ஆணையம்

சிங்கப்பூரில் ஜூன் மாதம் அரசாங்க, வங்கி அதிகாரிகளைப்போல் நடித்து ஏமாற்றிய மோசடிக்காரர்களிடம் 63 பேர் மொத்தம் ஏறக்குறைய $10.6 மில்லியனை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாணய ஆணையமும் காவல்துறையும் ஜூலை 27ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கை இதனைத் தெரிவித்தது. இத்தகைய மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக அந்தக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.

முதலில், உள்ளூர் வங்கியைச் சேர்ந்த அதிகாரி என்ற போர்வையில் மோசடிக்காரர்கள் தொலைபேசியில் அழைப்பர். பின்னர் பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கு மூலம் இடம்பெற்றதாகக் கூறப்படும் வங்கிப் பரிமாற்றத்தைச் சரிபார்க்கும்படி அவர்கள் கேட்பர்.

பாதிக்கப்பட்டவர் அத்தகைய பணப்பரிமாற்றம் குறித்துத் தனக்குத் தெரியாது என்று கூறினால் காவல்துறை அல்லது சிங்கப்பூர் நாணய அதிகாரி என்று கூறப்படும் ஒருவருடன் பேசும்படி அந்தத் தொலைபேசி இணைப்பு மாற்றிவிடப்படும்.

அந்த ‘அதிகாரி’, பாதிக்கப்பட்டவர் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுவார்.

விசாரணையில் உதவுவதாகக் கூறி குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றும்படி அவர் கூறுவார். அந்த வங்கிக் கணக்கு அரசாங்கத்தின் கணக்கு என்று அவர் உறுதியளிப்பார்.

சில சம்பவங்களில், கூடுதல் விசாரணை என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர் மூன்றாவது ‘அதிகாரி’யிடம் பேசவும் நேரிட்டது. அவர்கள் கூடுதல் பணம் செலுத்தும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள இயலாமல் போன பிறகோ வங்கி அல்லது காவல்துறையின் அதிகாரபூர்வ தளங்களை அணுகிய பிறகோ தாங்கள் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டோர் உணர்ந்தனர் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.

அரசாங்க அதிகாரிகள் ஒருபோதும் பொதுமக்களிடம் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றிவிடும்படி தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வாயிலாகக் கேட்கமாட்டார்கள் என்று அது கூறியது.

மோசடிக்காரர்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் இடையிலான ‘வாட்ஸ்அப்’ தகவல் பரிமாற்றங்களைக் காட்டும் படங்கள்.
மோசடிக்காரர்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் இடையிலான ‘வாட்ஸ்அப்’ தகவல் பரிமாற்றங்களைக் காட்டும் படங்கள். - படங்கள்: சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் நாணய ஆணையம்

பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு, சிங்பாஸ், மத்திய சேம நிதிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை அரசாங்க அதிகாரிகள் கேட்கமாட்டார்கள். வங்கி இணையத்தளங்களுக்கு இட்டுச் செல்லும் இணையத் தொடர்பு முகவரியைப் பயன்படுத்தும்படியோ செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படியோ கூறமாட்டார்கள்.

அடையாளத்தை உறுதிப்படுத்தாமல், காவல்துறை அல்லது ஆணையத்தின் அதிகாரி என்று யாராவது தொலைபேசியில் அழைத்தால், பொதுமக்கள் அவரை ‘கவ்.எஸ்ஜி’ (gov.sg) மூலம் குறுஞ்செய்தி அனுப்பும்படிக் கேட்கவேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்