சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகளில் குறைந்தது 120 பேருக்கு $330,000 இழப்பு

சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகளில் குறைந்தது 120 பேருக்கு $330,000 இழப்பு

1 mins read
1ceb8310-29aa-4c7e-8236-cd30a4a6b629
ஆள்மாறாட்ட மோசடிகள் அண்மையில் அதிகரித்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.  - படம்: சிங்கப்பூர் காவல்துறை

ஜனவரி முதல் ஜூலை 26 வரை, 120க்கும் மேற்பட்டோர் சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகளில் $330,000 இழந்தனர். ஆள்மாறாட்ட மோசடிகள் அண்மையில் அதிகரித்திருப்பதாகக் காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

பல்வேறு வர்த்தகச்சின்ன விளம்பர இயக்கங்களிலிருந்து அன்பளிப்புப் பற்றுச்சீட்டுகள் அல்லது ரொக்கப்பரிசு கிடைத்திருப்பதாகச் சொல்லி, மைக்ரோசாஃப்ட், கிராப், கூகல் போன்ற பல்வேறு தளங்களிலிருந்து அனுப்பப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் தொலைபேசி எண்ணையும் மோசடிக்காரர்கள் கேட்டனர். அவற்றைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலும் அட்டைகளிலும் மோசடிக்காரர்கள் பரிவர்த்தனைகள் செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடவுச்சொல்லை மாற்றுவதற்கான ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை மோசடிக்காரர்களிடம் தெரிவித்தவர்கள் தங்களது சமூக ஊடகக் கணக்குகளின் பயன்பாட்டையும் இழக்க நேரிடலாம். சிலர் தங்களது கணக்குகளுடன் இணைக்கப்பட்ட கடவுச்சொற்களை அல்லது மின்னஞ்சல் முகவரிகளை மாற்றுவதற்கான இணைப்புகளை அழுத்தியவுடன் தங்களது சமூக ஊடகக் கணக்குகளை இழந்துவிடக்கூடும்.

தொலைபேசி எண், கடவுச்சொல் தவிர, கடன் அட்டை அல்லது ரொக்கக்கழிவு அட்டை, இணைய வங்கிச்சேவை விவரங்கள் போன்றவற்றையும் மோசடிக்காரர்கள் கேட்கக்கூடும் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர். டிபிஎஸ் வங்கியின் சின்னம் கொண்ட போலி இணையத்தளத்திற்கு இட்டுச்செல்லும் இணைப்பும் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை நம்பி தங்களது வங்கி விவரங்களை வெளியிட்டவர்கள், தங்களது கணக்குகளில் மோசடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருப்பதைப் பின்னர் கண்டறிந்தனர்.

மோசடி பற்றிய மேல்விவரங்களுக்கு, பொதுமக்கள் www.scamalert.sg இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்