தேவையில்லாத பரிசோதனைகள் செய்து அவசர சிகிச்சையைத் தாமதப்படுத்திய மருத்துவர்

தேவையில்லாத பரிசோதனைகள் செய்து அவசர சிகிச்சையைத் தாமதப்படுத்திய மருத்துவர்

3 mins read
e181abc2-296d-41f9-a412-79b0eb3d0253
டாக்டர் வோங் சியோங் சுங். - படம்: எஸ்எச்எஸ்சி

தனியார் துறையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் ஒருவர், தனது மருத்துவ நிலையத்திற்கு நோயாளிகளைக் கொண்டுவர இரண்டு அவசர மருத்துவ வாகனச் சேவைகளுக்குத் தரகுப்பணம் கொடுத்தார்.

அந்த நோயாளிகளின் கட்டணங்களை உயர்த்துவதற்காக அவர்களுக்குப் பல்வேறு பரிசோதனைகள் செய்தார். அவற்றில் பலவும் அவசியமில்லாதவை.

இதனால், அவசர சிகிச்சை தேவைப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு சிகிச்சை தாமதமடைந்ததாக இடைக்கால உத்தரவுக் குழு சிங்கப்பூர் மருத்துவ மன்ற இணையத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவிட்ட அறிக்கை தெரிவித்தது.

டாக்டர் வோங் சியோங் சுங் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் குறித்து ஒழுங்குமுறை விசாரணை மன்றம் இறுதித் தீர்மானம் எடுப்பதற்குமுன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்பதை ஆராய்வதற்காக இடைக்கால உத்தரவுக் குழு அமைக்கப்பட்டது. ஒழுங்குமுறை விசாரணை மன்றத்தின் விசாரணைகள் நிறைவடைய சில ஆண்டுகள் எடுக்கும்.

டாக்டர் வோங் தன்னிடம் நோயாளிகளைக் கொண்டு வருவதற்காக சிங்கப்பூர் ஆம்புலன்ஸ் சங்கத்திற்கும் சிங்கப்பூர் அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கும் மொத்த கட்டணத்தில் 10 முதல் 20 விழுக்காடுவரை கொடுத்ததாகக் குழுவின் தீர்மான அறிக்கை தெரிவித்தது.

இதுபற்றிப் புகார் கிடைத்ததும், 2020 ஆகஸ்ட் 6ஆம் தேதி சுகாதார அமைச்சு தணிக்கை நடத்தியது. அவசர மருத்துவ வாகனங்கள் அழைத்துவந்த ஐந்து நோயாளிகளுக்கு டாக்டர் வோங் தேவையில்லாத பரிசோதனைகள் செய்ததாக அமைச்சு கண்டறிந்தது. அவர்களில் மூவருக்குத் தேவைப்பட்ட அவசர சிகிச்சைகள் தாமதமடைந்தன. அதனால் நோயாளிகளில் ஒருவர் உயிரிழந்தார்.

டாக்டர் வோங், ஹெல்த்தி ஹார்ட் ஸ்பெ‌ஷலிஸ்ட் சென்டருக்கும் சோமர்செட் இமேஜிங் சென்டருக்கும் மருத்துவ இயக்குநராக இருக்கிறார்.

நோயாளிகளில் ஒருவர் வீட்டில் விழுந்து தலையில் காயம்பட்டதாகக் குழுவின் அறிக்கை விவரித்தது. காலை 10.40 மணியளவில் அவசர மருத்துவ வாகனத்தில் டாக்டர் வோங்கின் மருத்துவ நிலையத்திற்கு நோயாளி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது மூளை, கழுத்தெலும்பு, நெஞ்சுக்கூடு, இடுப்பெலும்பு ஆகியவை ‘சிடி ஸ்கேன்’ எனும் ஊடுகதிர் படமெடுப்புப் பரிசோதனை செய்யப்பட்டன. அத்துடன், இதயத்துடிப்பலைப் பதிவு (இசிஜி) பரிசோதனையும் செய்யப்பட்டது.

ஊடுகதிர் படமெடுப்புப் பரிசோதனையின்போது நோயாளியின் நிலைமை மோசமடைந்தது. அவர் வாந்தி எடுத்து, மூச்சுவிட சிரமப்பட்டார். பிற்பகல் 1.50 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மூன்று நாள்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் பக்கவாதம் காரணம்.

இந்த நோயாளிக்கு அவசர மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் அவசரப் பராமரிப்பு மருத்துவ வல்லுநர்கள் இருவர் இடைக்காலக் குழுவிடம் தெரிவித்தனர். அவர் நேரடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவரது வீட்டிலிருந்து மருத்துவ நிலையத்திற்கும், அங்கிருந்து மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படுவதற்குள் 140 நிமிடங்கள் கடந்துவிட்டன.

இரண்டு மணி நேரத்திற்கு மேற்பட்ட தாமதம் பாதகமான விளைவுகளை உண்டாக்கும் என்று வல்லுநர்களில் ஒருவர் கூறினார்.

இன்னொரு நோயாளி கீழே விழுந்ததால் அவரது இடது காலின் மேல்பகுதி முறிந்து போயிருந்தது. ஊடுகதிர்ப் பரிசோதனையில் எலும்புமுறிவைக் கண்டறிந்த பிறகு, ஊடுகதிர் படமெடுப்புப் பரிசோதனைகளைச் செய்ய விரும்பினார் டாக்டர் வோங்.

அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து, 995 எண்ணை அழைத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். மருத்துவமனையை அடைந்தவுடன், அவர் இரத்த சோடியக் குறைவினால் குழப்பநிலையில் இருந்ததாகக் கண்டறியப்பட்டது.

இவரும் நேரடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் வல்லுநர்கள் கூறினர்.

சுகாதார அமைச்சு 2021 ஆகஸ்ட் மாதம் டாக்டர் வோங்குக்கு எதிராக சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தில் புகார் செய்தது.

ஒழுங்கீன விசாரணை நிறைவடையும்வரை அல்லது 18 மாதகாலத்திற்கு டாக்டர் வோங் தொடர்ந்து மருத்துவச் சேவை வழங்க இடைக்காலக் குழு ஆறு நிபந்தனைகளை விதித்துள்ளது. தனது வேலையிடத்திற்கு நோயாளிகளைக் கொண்டுவர அவசர மருத்துவ வாகனச் சேவைக்குப் பணம் கொடுக்கக்கூடாது என்பதும் அதில் உள்ளடங்கும்.

குறிப்புச் சொற்கள்