நீ சூன் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியை (மசெக) எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே அந்த வட்டாரத்துக்குப் புதியவர்கள் என்று அந்தக் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா கூறியுள்ளார்.
ஈசூன் விளையாட்டரங்கில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய 64 வயது திருவாட்டி லீ, அத்தொகுதியில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் மசெக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசினார்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் வழிநடத்தும் அந்த அணியில் ஜாக்சன் லாம், லீ ஹுய் யிங், சையது ஹருன் அல்ஹப்ஷி, கோ ஹன்யான் ஆகியோர் நீ சூனில் களமிறங்கியுள்ளனர்.
2011 முதல் 2020ஆம் ஆண்டு வரை திருவாட்டி லீ பீ வா நீ சூன் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.
பொதுத் தேர்தல் 2020ல் அங்கு மக்கள் செயல் கட்சி 61.9 விழுக்காட்டு வாக்குகளுடன் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியை வென்றது.
ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியைக் குறிப்பிட்டுப் பேசிய திருவாட்டி லீ, நீ சூன் குடியிருப்பாளர்களைப் பற்றி அவர்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் எனக் கேள்வி எழுப்பினார்.
“அரசாங்கத்தைக் குறைசொல்ல யாருக்குதான் தெரியாது? பேசுவது எளிது,” என்று திருவாட்டி லீ சாடினார்.
புதுமுகம் லீ ஹுய் யிங்கிற்கு கடந்த 15 ஆண்டுகளாக வழிகாட்டியதாகவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தாம் அவருக்குத் தொடர்ந்து வழிகாட்டப் போவதாகவும் திருவாட்டி லீ உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“ஹுய் யிங் எப்படிப்பட்டவர் எனச் சிலர் கேட்டிருந்தனர். ஹுய் யிங்கிற்கு லீ பீ வாவின் குணம் கொஞ்சம் இருப்பதாகக் கூறினேன். நேருக்கு நேர் பேசுபவர்; ஆனால் நேர்மையானவர்; கடும் உழைப்பாளி,” என்று திருவாட்டி லீ புகழ்ந்தார்.