சிங்கப்பூருக்கு எதிரான திரு லீ சியன் யாங்கின் குறைகூறல்களுக்கு ஏற்கெனவே பதிலளிக்கப்பட்டு விட்டது என்றும் அவரது நடவடிக்கைகளால் அரசாங்கம் தாம் ஆற்றவேண்டிய கடமையிலிருந்து திசைதிரும்பி விடாது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்களுக்கு அவசியமான அடிப்படைப் பிரச்சினைகளில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று அவர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்களின் வாழ்வாதாரத்தைக் கவனித்தல், நாட்டின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல், நாட்டு மக்களுக்குச் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவதை உறுதிப்படுத்துதல் போன்றவை அந்த அடிப்படைப் பிரச்சினைகள் என்று பிரதமர் வோங் பட்டியலிட்டார்.
திரு லீ சியன் யாங்கிற்கு ஆகஸ்ட் மாதம் பிரிட்டன் அரசியல் அடைக்கலம் கொடுத்ததாக அண்மையில் தகவல்கள் வெளிவந்த நிலையில் திரு வோங்கின் கருத்து வெளியாகி உள்ளது.
சிங்கப்பூர் தம் மீது கூறப்படும் குறைகூறல்களுக்கு எதிராக சட்டங்களைக் கருவிகளாகப் பயன்படுத்துவதாகவும் தாமும் தமது குடும்பமும் அரசியல் ரீதியாக இடையூறுகளைச் சந்தித்ததாகவும் திரு லீ சியன் யாங் பல்வேறு ஊடக நேர்காணல்களில் கூறி வந்தார்.
அதுபற்றி திரு வோங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, திரு லீ சியன் யாங்கின் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் அரசாங்கம் பதிலளித்துவிட்டது என்றார்.

