58 மாணவர்களுக்கு லீ குவான் யூ விருதுகள்

58 மாணவர்களுக்கு லீ குவான் யூ விருதுகள்

3 mins read
6bc7e723-de1d-420d-97fd-1b52b21d84a9
லீ குவான் யூ தொழில்நுட்ப விருதுபெற்ற மாணவர் குழு. - படம்: பே கார்த்திகேயன்

தமது குடும்பத்தில் நிலவிய சிரமங்கள், பொருளியல் சிக்கல், பாட்டியைப் பராமரிக்க வேண்டிய நிலை எனப் பல்வேறு சூழல்களால் கல்வியை நிறுத்தியிருந்தாலும், பத்து ஆண்டுகளுக்குப் பின் தொழில்நுட்பக் கல்விக் கழக வேலை-கல்விப் பட்டயம் பயின்று விருதும் வென்றுள்ளார் தாரணி கார்த்திகேசு, 32.

தமது சமூக, பராமரிப்புப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளவும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவும் கல்வி பயின்றுள்ளார் தாரணி.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் லீ குவான் யூ முன்மாதிரிப் பயிற்சி பெறுநர் விருதை வென்றுள்ள இவர், “இது மிகப் பெருமையான தருணம். நான் மீண்டும் கல்வி பயில்வேன் என நினைக்கவில்லை. விருது வென்றிருப்பதும் கூடுதல் மகிழ்ச்சி,” என்றார் தாரணி.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளுக்காக லீ குவான் யூ இணைப்பாட நடவடிக்கைக்கான விருது வென்றார் ரோஹின் சச்சிட் மகேந்திரன்.

எனது நண்பர் மூலம் நீடித்த நிலைத்தன்மைக் குழு குறித்து அறிந்தேன். நமது சுற்றுச்சூழல், அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். பல்வேறு திட்டங்களிலும் பங்கேற்றேன். அதற்காக விருது வென்றுள்ளதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் ரோஹின்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் லீ குவான் யூ விருதுகள்

கல்வியைத் தாண்டி பல தளங்களில் சிறந்து விளங்கிய தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் 58 பேருக்கு லீ குவான் யூ விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பப் கல்விக் கழகத் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெற்ற விருதளிப்பு விழாவில் மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

2000ஆம் ஆண்டிலிருந்து லீ குவான் யூ முன்மாதிரி மாணவர் பயிற்சிப் பெறுநர் விருது, லீ குவான் யூ இணைப்பாட நடவடிக்கை விருது, லீ குவான் யூ தொழில்நுட்ப விருது ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்கியதற்கும், பிற மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கியதற்காகவும் ஒன்பது மாணவர்களுக்கு முன்மாதிரி மாணவர் விருது வழங்கப்பட்டது. மூவர் மாதிரிப் பயிற்சி பெறுவோர் விருதினையும் பெற்றனர்.

ஆண்டுதோறும் ஒரு மாணவருக்கு முன்மாதிரிப் பயிற்சி பெறுநர் விருது வழங்கப்படும் நிலையில் இவ்வாண்டு மூவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு, கலை எனப் பல துறைகளில் சிறப்பான செயல்பாடுகள், தலைமைத்துவப் பண்புகள் உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கும் வண்ணம் மூவருக்கு இணைப்பாட நடவடிக்கை விருது வழங்கப்பட்டது.

தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கங்களைப் புகுத்தி தரமான, தொழில்துறையில் செயல்படுத்தும் வகையிலான திட்டங்களில் செயலாற்றிய பத்து குழுக்களுக்கு தொழில்நுட்ப விருதும் வழங்கப்பட்டது.

இத்துடன், இணைப்பாட நடவடிக்கைகளுக்கான பதக்கம், கலை, விளையாட்டுத் துறைகளுக்கான உன்னதநிலை விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

லீ குவான் யூ விருதாளர்கள் உட்பட 432 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி சுவா சூன் குவான், “கழகம் மாணவர்களைத் துறை நிபுணர்களாக மாற்றுவதுடன் அவர்களது மதிப்புகளையும் மீள்திறனையும் வளர்க்கும் நோக்கம் கொண்டுள்ளது. அறிவைத் தாண்டி, எதிர்கால, வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக் கொடுப்பதால், மாணவர்களால் சமூகத்துக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும்,’ என்றார்.

வெற்றி என்பது அவர்களுக்கு என்ன தெரியும் என்பதைவிட அவர்களால் சமூகத்திற்கு விளையும் நன்மையைப் பொறுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்