அமரர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் காலமானார்

4 mins read
e6d53b21-e3d5-471b-ac35-d1356c50d400
டாக்டர் லீ வெய் லிங். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் காலமானார். அவருக்கு வயது 69.

இத்தகவலை அவருடைய இளைய சகோதரர் லீ சியன் யாங் புதன்கிழமை (அக்டோபர் 9) அதிகாலை 5.50 மணிக்கு ஃபேஸ்புக் வழியாகத் தெரிவித்தார்.

டாக்டர் லீயின் மறைவு குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மூத்த அமைச்சர் லீ, தம் சகோதரி போராட்ட குணம் படைத்தவர் என்றும் வாழ்நாள் முழுவதும் அவரின் பண்புநலன் மாறாமல் இருந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

“நண்பர்களிடம் அவர் மிகுந்த விசுவாசமாக இருந்தார். சாதகமற்ற சூழலில் உள்ளோர் மீது இயல்பாகவே இரக்கமுடையவர். அநியாயத்தைக் கண்டாலோ, தவறு நடந்திருக்கலாம் என்று சந்தேகித்தாலோ ஏதாவது செய்ய முனைப்பு காட்டுவார்,” என்றார் மூத்த அமைச்சர் லீ.

அமரர் லீயின் இரண்டாவது பிள்ளையும் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங்கின் சகோதரியுமான டாக்டர் லீ, அரியவகை மூளைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது நாலாண்டுகளுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்நோயால் அவரது நடமாட்டம், கண் இயக்கம், உடற்செயல்பாடு ஆகியவை பாதிக்கப்பட்டன. பின்னர் உணவை விழுங்கவும் அவர் சிரமப்பட்டார். இறுதியில், அது நுரையீரல் அழற்சி (நிமோனியா), மூச்சுத்திணறல் போன்ற கடுமையான பாதிப்புகளுக்கு இட்டுச்சென்றது.

நரம்பியல் வல்லுநரான டாக்டர் லீ, கடந்த 2004ஆம் ஆண்டுமுதல் 2014ஆம் ஆண்டுவரை தேசிய நரம்பியல் நிலையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.

1986 மே 3ஆம் தேதி புக்கிட் மேரா நூலகத்தில் வலிப்பு நோய் குறித்து டாக்டர் லீ வெய் லிங் உரையாற்றுகிறார்.
1986 மே 3ஆம் தேதி புக்கிட் மேரா நூலகத்தில் வலிப்பு நோய் குறித்து டாக்டர் லீ வெய் லிங் உரையாற்றுகிறார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

1955ல் சிங்கப்பூரின் மிகவும் நன்கு அறியப்பட்ட குடும்பங்களில் ஒன்றில் பிறந்த டாக்டர் லீ, அமரர் லீ குவான் யூ, திருவாட்டி குவா கியோக் சூ தம்பதியின் ஒரே மகளாவார்.

அவருக்கு நான்கு வயதானபோது அவரின் தந்தை சிங்கப்பூரின் முதல் பிரதமரானார்.

டாக்டர் லீயின் சாதனைகள் பல ஆண்டுகளாக செய்தித்தாள் கட்டுரைகளில் வரிசைப்படுத்தப்பட்டன. 1970ல் கராத்தேவில் கறுப்புப் பட்டை பெற்ற ஆக இளம் சிங்கப்பூரர்களில் ஒருவராக அவர் விளங்கினார். ஆண்டுக்கு ஆண்டு தனது வகுப்பில் முதலிடம் பெற்ற அவர், 1973ல் அதிபர் கல்விமான் ஆனார்.

வீட்டிலேயே டாக்டர் லீயின் உயிர் பிரிந்தது என்றும் இறுதிச்சடங்கு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் திரு லீ சியன் யாங் தெரிவித்துள்ளார்.

“2015ல் எங்கள் தந்தையின் இறுதிச்சடங்கில் லிங் தமது புகழஞ்சலியில், ‘நான் மனமுடைந்து விடக்கூடாது, நான் ஒரு ஹக்கா பெண்’ எனக் கூறியிருந்தார். இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரியாக ஏற்பதில் உங்கள் அளவுக்கு நான் இல்லை,” என திரு லீ பதிவிட்டார்.

‘ஆரம்பகால நினைவுகள்’

தம் சகோதரியைப் பற்றிய தமது ஆரம்பகால நினைவுகளில் ஒன்று, பாலர் பள்ளியில் அவரின் முதல் நாள் அனுபவம் என மூத்த அமைச்சர் லீ சொன்னார். சகோதரிக்கு ஆறுதல் சொல்ல தாம் எவ்வளவோ முயற்சி செய்தும், வீடு திரும்பும்வரை பள்ளிப் பேருந்தில் அவர் அழுதுகொண்டே இருந்ததாக திரு லீ சொன்னார்.

“பின்னர், பள்ளி முடிந்து எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல எங்கள் தாத்தாவை வரச் சொல்லி எங்கள் தாயார் ஏற்பாடு செய்தார்,” என்றார் திரு லீ.

டாக்டர் லீ விலங்குகள் மீது, குறிப்பாக நாய்கள் மீது அலாதிப் பிரியம் கொண்டவர் என்றும் அவர் கால்நடை மருத்துவராக விரும்பினார் என்றும் மூத்த அமைச்சர் லீ நினைவுகூர்ந்தார்.

ஆனால், தமது விருப்பத்திற்கு எதிராக பெற்றோர் அறிவுறுத்தியதால், டாக்டர் லீ மருத்துவம் பயின்றார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் (இப்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்) வகுப்பில் முதல்நிலை மாணவியாக அவர் திகழ்ந்தார். பின்னர், குழந்தை நல நரம்பியல் நிபுணராகி, வலிப்பு நோயில் அவர் நிபுணத்துவம் பெற்றார்.

“எல்லாவற்றிற்கும் அவர் கொண்ட அதே தீவிரத்தையும் கடப்பாட்டையும் மருத்துவத்துக்கும் அவர் கொண்டு வந்தார். தம் நோயாளிகளுடன் அணுக்கமான பிணைப்பை அவர் ஏற்படுத்திக்கொண்டார். அவர்களில் பலருக்கும் பல ஆண்டுகளாக அவர் சிகிச்சை அளித்தார்,” என்றார் மூத்த அமைச்சர் லீ.

1965ல் ஜூரோங்கிற்குச் சென்ற திரு லீ குவான் யூ, அங்கு தொழிற்சாலை ஊழியர் ஒருவருன் பேசுகிறார். திரு லீயுடன் மகள் லீ வெய் லிங் (நடுவில்) உள்ளார்.
1965ல் ஜூரோங்கிற்குச் சென்ற திரு லீ குவான் யூ, அங்கு தொழிற்சாலை ஊழியர் ஒருவருன் பேசுகிறார். திரு லீயுடன் மகள் லீ வெய் லிங் (நடுவில்) உள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திரு லீ சியன் யாங்கும் தாமும் திருமணம் செய்துகொண்டு வீடு மாறிய பிறகு, எண் 38 ஆக்ஸ்லி சாலையில் உள்ள லீ குடும்ப இல்லத்தில் பெற்றோருடன் தம் சகோதரி தொடர்ந்து தங்கியிருந்ததாக மூத்த அமைச்சர் லீ கூறினார்.

“பெற்றோருக்கு வயதானபோது அவர்களின் நலனில் அவர் கவனம் செலுத்தி வந்தார். எங்கள் தாயாருக்குப் பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரின் பராமரிப்பையும் கவனித்து வந்தார். அதேவேளையில், எங்கள் தாயாரைக் கவனித்து வந்த என் தந்தையும் வயதாகி, பலவீனமடைந்ததால் அவரையும் என் சகோதரி பார்த்துக்கொண்டார். குறிப்பாக, 2010ல் எங்கள் தாயார் காலமானதைத் தொடர்ந்து, தந்தையைச் சகோதரி கவனித்துக்கொண்டார்,” என்றார் மூத்த அமைச்சர் லீ.

எண் 38 ஆக்ஸ்லி சாலையில் உள்ள லீ குடும்ப வீட்டு வாயிலில் புதன்கிழமை (அக்டோபர் 9) வைக்கப்பட்டுள்ள மலர்க்கொத்து.
எண் 38 ஆக்ஸ்லி சாலையில் உள்ள லீ குடும்ப வீட்டு வாயிலில் புதன்கிழமை (அக்டோபர் 9) வைக்கப்பட்டுள்ள மலர்க்கொத்து. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தலைவர்கள் இரங்கல்

டாக்டர் லீ தம் வாழ்வை மருத்துவத்துக்கு அர்ப்பணித்ததாக பிரதமர் லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கூறினார்.

“தமது வாழ்க்கைத்தொழில் முழுவதும், நோயாளி நலனிலும் மருத்துவ நன்னெறிகளிலும் அவர் உறுதியாகக் கவனம் செலுத்தினார்,” என்றார் பிரதமர் வோங்.

தமது வாழ்க்கைத்தொழிலின் பிற்பகுதியில், டாக்டர் லீ செய்தித்தாள் கட்டுரைகள் எழுதியதை பிரதமர் வோங் நினைவுகூர்ந்தார். இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை குறித்த தெளிவான கண்ணோட்டத்தையும் அமரர் லீ பற்றிய கதைகளையும் டாக்டர் லீ அக்கட்டுரைகளில் பகிர்ந்திருந்ததாக சொன்ன பிரதமர் வோங், அவரின் மறைவுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

இளம் வயதில் டாக்டர் லீயிடம் இருந்த மனவுறுதி, வாழ்க்கை இறுதி வரை தொடர்ந்தது என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறினார்.

1997 முதல் டாக்டர் லீயை பற்றி அறிந்திருந்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், ஒரு விஷயத்தில் அவர் வலுவான நம்பிக்கை கொண்டவராகவும் அதை நன்கு வெளிப்படுத்தியதாகவும் வர்ணித்தார்.

1973ல் டாக்டர் லீ இருந்த அதே அதிபரின் கல்விமான்கள் தொகுதியில் இருந்த மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், அவரை ஆர்வமுடையவர், அர்ப்பணிப்பு கொண்டவர் என்றார்.

இதனிடையே, வியாழக்கிழமை (அக்டோபர் 10) இரவு இடம்பெறவிருந்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கான இந்தியச் சமூகத்தின் பாராட்டு விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்