நடனக் கலைக்குத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்த புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் உஷாராணி மணியம் காலமானார். அவருக்கு வயது 76.
திருமதி உஷாராணியின் கலைப் பயணம் அவரது நான்கு வயதில் தொடங்கியது.
1963ஆம் ஆண்டு பாஸ்கர் ஆர்ட்ஸ் அகடமியில் பட்டம் பெற்ற திருமதி உஷாராணி, நடனக் கலையைச் சமூகத்திற்குப் பரவலாகக் கொண்டுசேர்த்த பெருமைக்குரியவர்.
ஒன்பது வயதிலேயே நடன மேதையாக அறியப்பட்ட அவர், வியத்தகு நடன ஆற்றலுக்காகப் பினாங்கு மேயரிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றவர்.
அரை நூற்றாண்டுக்குமேல் நடனத் துறையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதுடன், எண்ணற்ற உள்ளூர் நடன ஆசிரியர்களையும் மாணவர்களையும் அயராது உருவாக்கிய பெருமைக்குரியவர் திருமதி உஷாராணி.
திங்கட்கிழமை (மார்ச் 4) காலமான திருமதி உஷாராணி மணியத்தின் மறைவுச் செய்தி சிங்கப்பூர்க் கலையுலகிற்குப் பேரிழப்பு என்றும் அவரது பங்களிப்பு ஒவ்வொன்றும் காலத்தால் மறையாதது என்றும் பலர் தங்களின் நினைவஞ்சலிகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
மறைந்தும் வாழும் கலைஞருக்குப் புகழஞ்சலி
அளவிடற்கரிய பங்களிப்பைக் கலைத்துறைக்கு நல்கிச் சென்றுள்ளவரும் ‘நாட்டிய ஆச்சார்ய மணி’ விருதுக்குச் சொந்தக்காரருமான திருமதி உஷாராணியின் கலைச்சேவைகளை நினைவுகூர்ந்தார் புகழ்பெற்ற இசைக் கலைஞரான டாக்டர் பாக்யா மூர்த்தி.
“ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடனம், கலைசார்ந்த வாழ்க்கைப்பயணத்தில் திருமதி உஷாராணியுடன் இணைந்திருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“1980களில் திருமதி உஷாராணி நாட்டிய நாடகம் படைத்துவந்த காலத்திலிருந்து இன்றுவரை நடனம், இசை எனப் பல்வேறு பிரிவுகளில் ஒருங்கிணைந்து ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து நல்ல நண்பர்களாகக் கடந்துவந்திருக்கிறோம்.
“தமிழ் மொழி பேசும் கலைஞராக இருந்தாலும் வெவ்வேறு மொழிகளில் உள்ள கலை வடிவங்களை ஆர்வத்துடன் கற்று அவற்றையும் கலைப்படைப்பாக அரங்கேற்றுவது திருமதி உஷாராணியின் தனித்துவம்,” என்றார் திருமதி பாக்யா மூர்த்தி.
“எனது தாய்மொழி கன்னடம். அவ்வகையில் புரந்தரதாசரின் இசைப் படைப்புகளை மிகவும் கடப்பாட்டுடன் கற்று அவற்றை நயத்துடன் படைத்த உஷாராணியின் அர்ப்பணிப்பு எங்கள் நட்பை இன்னும் ஆழமாக்கியது.
“மகிழ்ச்சி ததும்பும் அவரது முகமும் சக கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவரிடமும் அவர் பழகும் விதமும் அவரது விருந்தோம்பலும் என்றும் நினைவை விட்டு அகலாது,” என்று புகழ்மாலை சூட்டினார் டாக்டர் பாக்யா மூர்த்தி.
இந்திய செவ்விசைப் புல்லாங்குழல் கலைஞரும் இசையமைப்பாளருமான கானவினோதன் ரத்னம், திருமதி உஷாராணியின் மறைவுச் செய்தி தம் உள்ளத்தை நொறுக்கிவிட்டது என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட திரு கானவினோதன், “நடன உலகில் ரத்தினக்கல்லாகத் திகழ்ந்த திருமதி உஷாராணியை நாம் இழந்தாலும், அவரது நடனம் என்றென்றும் நிலைத்திருக்கும்,” என்று கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று நடன வகுப்பில் தமது குருவான திருமதி உஷாராணியைச் சந்தித்த திருமதி அனுராதா (38), அதுவே தங்களின் இறுதிச் சந்திப்பாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றார்.
“மூன்று வயதில் முதன்முதலாக எனக்கு அறிமுகமான நடன, ஆசிரியையிடமே என் மூன்று வயது மகளும் நடனம் கற்கவேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்.
“பதினாறு வயதில் நான் அரங்கேற்றம் செய்தபோது, அதற்கான உடைகள், ஒப்பனை, பயிற்சி நடனங்கள் என ஒவ்வொன்றிலும் மிகுந்த கவனம் செலுத்தி என்னைப் போன்ற பல மாணவர்களின் மனத்தை வென்றவர் எங்கள் மரியாதைக்குரிய ஆசிரியர் திருமதி உஷாராணி.
“ஆசிரியர் என்பதற்கும் அப்பால் அவர் எங்களிடம் காட்டிய பரிவும் கொண்டிருந்த தாயுள்ளமும் என்றுமே நினைவில் நிற்கும். அவரது குருவான சிங்கப்பூர் இந்திய நடனக்கலையின் முன்னோடியாக அறியப்படும் சாந்தா பாஸ்கரிடம் எங்கள் ஆசிரியை கொண்டிருந்த பக்தி மிகவும் குறிப்பிடத்தக்கது.
“காலமாகிவிட்டாலும் எங்கள் ஆசிரியர் கற்றுக்கொடுத்த கலைகள் வழியாக அவர் என்றும் நீங்காப் புகழுடன் வாழ்வார்,” என்று நினைவஞ்சலி செலுத்தினார் திருமதி அனுராதா.
சமூக நிலையங்களிலும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நடனக்கலையைக் கற்பித்த திருமதி உஷாராணி, உள்ளூர்க் கலையரங்குகள், கோயில்களில் நடனமணிகளை மேடையேற்றியவர்.
சிங்கப்பூர்க் கலையுலகில் இவராற்றிய அரும்பணிகளைக் கௌரவிக்கும் வகையில் 2024ஆம் ஆண்டு சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர்கள் பட்டியலில் (Indian Hall of Fame) திருமதி உஷாராணி மணியம் இணைக்கப்பட்டார்.
காலஞ்சென்ற திருமதி உஷாராணியின் இறுதிச்சடங்கு புதன்கிழமை (மார்ச் 5) பிற்பகல் மண்டாய் தகனச் சாலையில் நடைபெறவுள்ளது.

