சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளராகத் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் விலகிய திரு லியோங், புதன்கிழமை (மார்ச் 26) மீண்டும் அந்தப் பதவியை ஏற்றுள்ளார்.
முன்னதாக, 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் கட்சியின் தலைமைச் செயலாளராகத் திரு லியோங் நியமிக்கப்பட்டார்
தமது சமூக ஊடகப் பதிவுக்கு, இணையத்தில் வேண்டுமென்றே வெளியிடப்படும் பொய்யான தகவல்களுக்கு எதிரான சட்டத்தின்கீழ் (POFMA) திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
அதையடுத்து கட்சியின் தலைமைச் செயலாளராகச் செயலாற்றிய தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவாவிடமிருந்து திரு லியோங் தற்போது அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி இந்த விவரங்களைப் புக்கிட் தீமா கடைத்தொகுதியில் உள்ள அதன் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் வெளியிட்டது.
திரு லியோங்கைத் தலைமைச் செயலாளராக நியமிப்பதில் எந்தப் போட்டியும் இருக்கவில்லை என்று கட்சித் தலைவர் டாக்டர் டான் செங் போக் தெரிவித்தார்.
திருவாட்டி ஹேசல் புவா கட்சியின் முதலாம் துணைத் தலைவராகச் செயல்படுவார்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாதம் 20ஆம் தேதி கட்சியின் மத்தியச் செயற்குழுவில் புதிதாக அறுவர் சேர்க்கப்பட்டனர்.
கடந்த மத்தியச் செயற்குழுவில் இருந்த எட்டு பேர் இம்முறை சேர்த்துக்கொள்ளப்படவில்லை.