வெளிநாடுகளிலிருந்து வந்த இல்லப் பணிப்பெண்களில் 20க்கும் குறைவானவர்களே 2022லிருந்து 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அரசாங்க சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், பலதுறை மருந்தகங்கள், பொது மருத்துவர்களிடம் உதவி நாடியதாக மனிதவள மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் புதன்கிழமை (அக்டோபர் 15) தெரிவித்தார்.
அவ்வாறு உதவி நாடும்போது எந்த இல்லப் பணிப்பெண்ணும் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கியதாக மனிதவள அமைச்சுக்குத் தகவல் வரவில்லை என்றும் திரு ஹுவாங் நாடாளுமுன்றத்தில் கூறினார்.
“மனநலப் பிரச்சினைகள் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகளுக்கு உதவி நாட, வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு இருக்கும் சட்டபூர்வ உரிமைகள், வெளிநாட்டு ஊழியர் வேலைக்கு அமர்த்துதல் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுபவை. அதன்படி வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் மருத்துவச் செலவை அவர்களின் முதலாளிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெறுவதும் அதில் அடங்கும்,” என்று அவர் விவரித்தார்.
வெளிநாட்டு ஊழியர் வேலைக்கு அமர்த்துதல் சட்டம், மனிதவள அமைச்சு வேலை உரிமம் வழங்கியிருக்கும் எல்லா வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும். வேலை அனுமதி அட்டை, எஸ் பாஸ் அட்டை, வேலை அனுமதிச்சீட்டு ஆகியவற்றை வைத்திருக்கும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
தங்கள் இல்லப் பணிப்பெண்கள் தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கும் முதலாளிகளுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வருங்காலத்தில் இல்லப் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க அத்தகைய முதலாளிகளுக்குத் தடையும் விதிக்கப்படலாம்.