சிங்கப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு முழுநேர வேலை வாய்ப்பு கிடைப்பதில் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
பட்டம் பெற்ற மாணவர்களில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே முழுநேர வேலை கிடைத்துள்ளது. இருப்பினும் அவர்களது ஊதியம் நிலையாக உள்ளது.
தனியார் கல்வி நிறுவன பட்டதாரி வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு தொடர்பான தரவுகளை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் புதன்கிழமை (ஏப்ரல் 8) வெளியிட்டது.
2024-2025 கல்வி ஆண்டில் பட்டம்பெற்ற மாணவர்களில் 46.9 விழுக்காட்டினருக்கு முழுநேர வேலை கிடைத்தது. அதற்கு முந்தைய கல்வி ஆண்டில் அது 46.4 விழுக்காடாக இருந்தது.
கணக்கெடுப்பில் கலந்துகொண்ட 2,600 பட்டதாரிகளில் 78.9 விழுக்காட்டினர் படித்துமுடித்த ஆறு மாதங்களில் முழு அல்லது பகுதிநேர வேலைகளைப் பெறுகின்றனர். அதற்கு முந்தைய கல்வி ஆண்டில் அது 78.6ஆக பதிவானது.
பட்டம்பெற்ற மாணவர்களில் 24 விழுக்காட்டினர் பகுதிநேரம் அல்லது தற்காலிகமான வேலைகளில் உள்ளனர்.
தன்னுரிமைத் தொழில்புரிவோரின் (freelance) எண்ணிக்கை சற்று அதிகரித்து 5.1 விழுக்காடாக உள்ளது. அதற்கு முந்தைய கல்வி ஆண்டில் அந்த எண்ணிக்கை 4.2 விழுக்காடாக இருந்தது.
நிலையான ஊதியம்
2023-2024ஆம் ஆண்டில் முழுநேர வேலையில் உள்ளவரின் சராசரி ஊதியம் $3,500 ஆகும். 2024-2025 கல்வி ஆண்டிலும் அதே ஊதியம் தொடர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களின் ஊதியம் $3,700. அதற்கு அடுத்த இடத்தில் எம்டிஐஎஸ் மாணவர்கள் உள்ளனர். அவர்கள் 3,580 பெறுகின்றனர்.
2024-2025 கல்வி ஆண்டில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் போன்ற ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் 74.4 விழுக்காட்டினர் பட்டம் பெற்ற ஆறு மாதத்திற்குள் முழுநேர வேலைகளைப் பெறுகின்றனர்.
தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் சராசரி ஊதியம் $4,500 ஆகும்.
தேசியச் சேவை செய்து முடித்த பலதுறையைத்தொழிற்கல்லூரி மாணவர்களில் 66.2 விழுக்காடு மாணவர்கள் நிரந்தர வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அவர்களின் சராசரி ஊதியம் $3,137 ஆகும்.

